மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

மற்றவர்களின் போராட்டங்களில் நான் எதற்கு?

மற்றவர்களின் போராட்டங்களில் நான் எதற்கு?

அமமுக சார்பில் அறிவிக்கப்படும் போராட்டங்களில் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும் மற்றவர்கள் அறிவிக்கும் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக டிடிவி. தினகரன் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காகச் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தினகரன் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலை திறந்துவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நான் பேசியதால், தங்களுக்கு மான நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என முதல்வர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரை முதல்வராக ஆக்கியதற்கு நன்றிக் கடனாக இதனைச் செய்துள்ளார். சட்டப்படி நாங்கள் வழக்கைச் சந்திப்போம். ஆட்சியாளர்கள் துரியோதனன் போலவும் ராவணன் போலவும் செயல்படுகின்றனர் என்பது இதுபோன்ற வழக்குகள் மூலம் மக்களுக்குத் தெளிவாகத் தெரியவரும்” என்று தெரிவித்தார்.

ராம மோகன ராவ் குறித்து அமைச்சர்கள் விமர்சிப்பது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த தினகரன், “எனது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் நேற்றுதான் ராம மோகன ராவ்வின் வாக்குமூலங்களை வாங்கிப் படித்தேன். அவரது வாக்குமூலங்கள் யாருக்கும் சார்பாகவும் இல்லை, எதிராகவும் இல்லை. அமைச்சர்கள் எல்லோரும் எதற்காக அச்சம் கொள்கின்றனர் எனத் தெரியவில்லை. அமைச்சர்கள் எதோ பயத்தில் உள்ளனர்” என்று பதிலளித்தார்.

"ஜி.எஸ்.டி. காரணமாகத் தமிழகத்துக்கு மத்திய அரசின் பங்கு குறைந்துவிட்டது என்பதற்காக ஜெயலலிதாவால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவருவதற்கான திட்டங்கள் நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்களைச் சேகரித்து வருகிறேன். விரைவில் ஊடகங்களிடம் தெரிவிப்பேன்.

சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் தீர்ப்பு வந்த பின்னர், சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெறும். அப்போது, ஸ்லீப்பர் செல்கள் வெளியில் வருவார்கள்” என்றும் குறிப்பிட்டார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon