மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடா?

குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடா?

தொடரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாறிவருகிறதா என்ற ஐயம் ஏற்படுவதாகக் கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இத்தகைய குற்றங்களுக்குக் காரணமான குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று (ஏப்ரல் 16) தனது முகநூல் பக்கத்தில், “காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுமிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இதயத்தைக் கிழிப்பதாக உள்ளன. இத்தகைய கொடுமைகள் உலகில் யாருக்கும் நிகழக் கூடாது.

8 வயதுக் குழந்தையைக் கொன்றவர்களுக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் போராட்டம் நடத்தியதுதான் கொடூரத்திலும் கொடூரம். இப்போதும் ஆசிஃபா குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தரப் போராடும் வழக்கறிஞர் தீபிகாவுக்கு ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறது.

இந்தச் சோகம் மறைவதற்கு முன்பாகவே குஜராத் மாநிலம் சூரத் நகரில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டிருக்கிறார். அவரது உடலை வீசி எறிந்துவிட்டுக் கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர். அந்தச் சிறுமியை வெறியர்கள் 8 முதல் 10 நாட்கள் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்தச் சிறுமியின் உடலில் 86 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே அந்தச் சிறுமிக்கு எத்தகைய கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கும் என்பதை உணரலாம்” என்று கூறியிருக்கும் ராமதாஸ், தமிழகத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாலியல் வன்முறை

தமிழ்நாட்டில், இந்த அளவுக்குக் கொடூரமாக இல்லாவிட்டாலும், மனிதத்தன்மைக்கு ஒவ்வாத வகையில் பல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன என்று கூறிய அவர் அந்தச் சம்பவங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 6 வயது ஹசீனா, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி புனிதா, திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியைச் சேர்ந்த 4 வயது குழந்தை மகாலட்சுமி, எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியில் தன்ராஜ் என்ற கொடியவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சரஸ்வதி என்ற எட்டாம் வகுப்பு மாணவி அவமானம் தாங்க முடியாமல் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டாள் என்று ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

“இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாறிவருகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இத்தகைய குற்றங்களுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு மனித உரிமைகளை ஒதுக்கிவைத்துவிட்டுக் கடுமையான தண்டனைகளை வழங்கி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இவர்கள் மீதான குற்றச்சாற்றுகளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து ஒரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். இதை எதிர்த்து எங்கு மேல்முறையீடு செய்தாலும் அதை இரு வாரங்களில் விசாரித்து தண்டனை உறுதி செய்யப்பட்டு அடுத்த ஒரு வாரத்தில் தண்டனையை நிறைவேற்றுவதுதான் இத்தகைய குற்றங்களை குறைக்க வகை செய்யும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon