மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

தங்கம் விலை குறைவு எதிரொலி!

தங்கம் விலை குறைவு எதிரொலி!

இந்தியாவின் தங்கம் இறக்குமதி மதிப்பு மார்ச் மாதத்தில் 40.31 சதவிகிதம் சரிவடைந்து 2.49 பில்லியன் டாலராக இருந்துள்ளது. இதன் தாக்கம் நடப்பு கணக்குப் பற்றாக்குறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக அமைச்சகத்தின் தகவலின் படி, 2016-17ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த தங்கம் இறக்குமதியின் மதிப்பு 4.17 பில்லியன் டாலராக இருந்துள்ளது. உலகச் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதாலேயே தங்கம் இறக்குமதியின் மதிப்பு சரிவடைந்திருக்கும் என்று தொழில் துறை நிபுணர்கள் கருதுகின்றனர். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களிலும் தங்கத்தின் இறக்குமதி சரிவையே சந்தித்துள்ளது. உலகளவில் மிகப்பெரிய தங்கம் இறக்குமதியாளர்களில் இந்தியாவும் ஒரு நாடாக உள்ளது. பெரும்பாலும் நகை உற்பத்தித் தொழிலுக்காகவே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளி இறக்குமதியின் மதிப்பு மார்ச் மாதத்தில் 31 சதவிகிதம் அதிகரித்து 267.33 மில்லியன் டாலராக இருந்துள்ளது. தற்போதைய நிலையில் தங்கம் இறக்குமதிக்கு 10 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. தங்கம் இறக்குமதிக்கான வரியைக் குறைக்க மத்திய நிதியமைச்சகத்திடம் நகை மற்றும் ரத்தினக் கற்கள் தொழில் துறையும், வர்த்தக அமைச்சகமும் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளன. 2016-17ஆம் ஆண்டில் 500 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்தில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை இருமடங்கு அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவிகிதமாக இருந்துள்ளது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon