மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

ராகுல் பிரதமராவார்: நாஞ்சில் சம்பத்

ராகுல் பிரதமராவார்: நாஞ்சில் சம்பத்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் தனிக்கட்சியை தினகரன் ஆரம்பித்த நிலையில் கட்சியில் அண்ணா, திராவிடம் உள்ளிட்ட பெயர்கள் இல்லை என்று கூறி தினகரன் அணியிலிருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்தார். மேலும் அரசியலை விட்டே விலகுகிறேன் என்றும், இனி இலக்கிய மேடைகளில் தன்னைப் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

நேற்று(ஏப்ரல் ௧௫) வாலாஜாவில் உள்ள வாலாஜா சதுக்கத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவில் நாஞ்சில் சம்பத் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இலக்கிய விழாவில் ‘காந்தியத்தைப் புரிய வைத்த ராகுல்காந்தி’ என்ற தலைப்பில் பேசிய சம்பத், “ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றதும் எனது தந்தை ராஜீவ்காந்தியை கொன்றவர்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறியதை கேட்டு நான் அகம் மகிழ்ந்தேன்.

26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைபட்டுக் கிடக்கும் 7 பேர் விடுதலை ஆவார்கள் என நினைத்துப் பெரு மகிழ்ச்சியடைந்தேன்” என்று கூறினார்.

மேலும், “காந்திய வழியில் ராகுல்காந்தி என நான் எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டேன். தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டேன் என ராகுல் காந்தி கூறும்போது, அவர் மகாத்மா காந்தி நிலைக்கு உயர்ந்து விட்டார் என நான் கருதுகிறேன். ராஜீவ்காந்தி இளம் வயதில் இந்தியாவின் பிரதமராக உயர்ந்தார். அவரைப் போலவே ராகுல் காந்தியும் இந்தியாவின் பிரதமராகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, தமிழகத்தில் தற்போது தேர்தல் நடந்தால் திமுக ஆட்சியில் அமரும். அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராவர். இவ்வாறு கூறுவதால் நான், திமுகவில் சேர்ந்து விட்டதாக அர்த்தமில்லை. நான் தினகரனை முதல்வர் ஆக்கப் பாடுபட்டேன். ஆனால் இனி அவர் முதல்வர் ஆக மாட்டார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon