மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

அம்பானி வாங்கும் கடன்!

அம்பானி வாங்கும் கடன்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் வெற்றி நடை போட்டு வரும் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜப்பானைச் சேர்ந்த வங்கிகளிடமிருந்து கடனாகச் சுமார் ரூ.3,250 கோடி பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில், ’53.5 பில்லியன் ஜப்பானிய யென் (சுமார் ரூ.3,250 கோடி) கடன் தொகையை 7 வருட புல்லட் முதிர்ச்சியுடன் பெறுவதற்கு ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்த வசதிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் உத்தரவாதம் அளிக்கிறது. மேலும் இக்கடன் தொகை ரிலையன்ஸ் ஜியோவின் மூலதனச் செலவுகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு ஜப்பானிய யென்னுக்கு 60 பைசா மாற்று விகிதத்துடன் பெறப்படும் இக்கடன் தொகையின் மதிப்பு தோராயமாக 3,248 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் இந்த அறிக்கையில், ’இக்கடனுக்கு மிசுகோ பேங்க் லிமிடெட், எம்.யூ.எப்.ஜி. பேங்க் லிமிடெட் மற்றும் சுமிட்டோமோ மிட்சூயி வங்கிக் கழகத்தின் சிங்கப்பூர் கிளை ஆகிய நிறுவனங்கள் முழுப் பொறுப்பு எடுத்துக் கொண்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து சுமார் 16.8 கோடி வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எதிர்காலத்துக்குத் தயாராக இருப்பதாகவும், 5ஜி, 6ஜி மற்றும் அதற்கு மேலான தொழில்நுட்பங்களைக் கையாளுவதற்கான திறன் கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon