மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

சிரியா மீது தாக்குதல்: புதின் கவலை!

சிரியா மீது தாக்குதல்: புதின் கவலை!

சிரியாவின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், அது உலகநாடுகளின் நட்புறவில் குழப்பத்தை உண்டாக்கும் என தெரிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.

கடந்த 13ஆம் தேதியன்று சிரியா மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த டூமா நகரைக் கைப்பற்றிய சிரியா ராணுவத்தினர் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியது அமெரிக்க அரசு. இதனால், சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது அமெரிக்க ராணுவம். இதனால், டமாஸ்கஸ் நகரமே புகை மண்டலமாக மாறியது. இந்த தாக்குதலை ஆதரித்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள், தாங்களும் இந்த தாக்குதலில் இணைவதாகத் தெரிவித்தன.

இந்த நிலையில், சிரியா அரசுக்கு ஆதரவளித்துவரும் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள், இந்த தாக்குதலை எதிர்க்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப்.

கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 14) ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, ரசாயன தாக்குதலில் மீண்டும் சிரியா ஈடுபட்டால் அந்நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று குறிப்பிட்டார்.

இந்தச் சூழலில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ரசாயன ஆயுதங்கள் தடை இயக்கம் சார்பாக சோதனை நடத்தப்பட்டது. மூன்று மணி நேரம் இந்த சோதனை நடந்தது என்றும், ரஷ்யா மற்றும் சிரியா அதிகாரிகள் அங்கு அவர்களுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யா, சோதனையில் ரசாயன ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்கு முன்னதாகவே அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ”இனிமேலும் சிரியா மீது மேற்கத்திய நாடுகள் தாக்குதலைத் தொடர்ந்தால், அது உலக நாடுகளின் நட்புறவில் குழப்பத்தை உண்டாக்கும்” என கூறியுள்ளார் ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின். இதுகுறித்து, அவர் ஈரான் அதிபர் ஹசன் ரௌகானியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் சிரியா உள்நாட்டுப்போரில் அரசியல் தீர்வு கிடைக்கப்போகும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இருவரும் ஒத்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளது ரஷ்ய அரசின் செய்திக்குறிப்பு.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon