மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

போலிப் பல்கலைப் பட்டியலில் இடம்பெறாத தமிழகம்!

போலிப் பல்கலைப் பட்டியலில் இடம்பெறாத தமிழகம்!

நாட்டில் 24 போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளதாகப் பல்கலை மானியக் குழுவான யுஜிசி பட்டியல் வெளியிட்டுள்ளது.

மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் நேரடியாகச் செயல்படும், யுஜிசி அமைப்புதான் உயர் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் அமைப்பில் மிகப் பெரியது.

இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வி ஒருங்கிணைப்பு, மேற்பார்வை, தரக் கட்டுப்பாடு ஆகியவை யுஜிசியின் முதன்மைப் பணிகள். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குதல், அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை செய்யவும் யுஜிசி அமைப்புக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

யுஜிசி கட்டுப்பாட்டில் செயல்படும் நாக் எனப்படும் தேசியத் தர மதிப்பீட்டு கவுன்சிலின் தர அந்தஸ்தை அனைத்துக் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் பெற வேண்டியது கட்டாயம். அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் ஆய்வு செய்த பிறகே நாக் அங்கீகாரம் அளிக்கும். இதுபோன்ற அங்கீகாரம், அந்தஸ்து, கட்டமைப்பு ஏதும் இல்லாத போலிக் கல்வி நிறுவனங்கள் பல, மாணவர்கள் சேர்க்கையை நடத்துகின்றன.

இக்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தகுதி சான்றிதழ்கள், எந்த வகையிலும் பயனளிக்காது. இதனால், ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கைப் பணிகள் தொடங்கும் முன் போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் யுஜிசி வெளியிட்டுள்ள பட்டியலில் நாடு முழுவதும் 24 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் 8 பல்கலைகளும், டெல்லியில் 7 பல்கலைகளும், மேற்கு வங்கத்தில் 2 பல்கலைகளும், ஒடிசாவில் 2 பல்கலைகளும், பிகார், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பல்கலையும் இடம் பெற்றுள்ளன. வெளி மாநிலங்களில் கல்வி பயிலச் செல்லும் மாணவர்கள், இப்பட்டியலை கவனித்து செயல்பட வேண்டியது அவசியம் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் விவரங்களை யுஜிசி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழகத்திலிருந்து ஒரு பல்கலையும் போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon