மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

டீல் பேசிய ஸ்டெர்லைட்: பொன்.ராதா

டீல் பேசிய ஸ்டெர்லைட்: பொன்.ராதா

சில ஆண்டுகளுக்கு முன்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியபோது, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் தன்னிடம் டீல் பேச வந்ததாகத் தெரிவித்துள்ளார் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

தூத்துக்குடி துறைமுக சபை சார்பாக, நேற்று (ஏப்ரல் 15) நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அதன் பின், அவர் நிருபர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தூத்துக்குடியில் நடந்துவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்துப் பேசியவர், சில ஆண்டுகளுக்கு முன்னால் இதேபோலப் போராடியபோது நான்கு நாட்கள் தான் தெருவில் இருந்ததாகத் தெரிவித்தார்.

“சில ஆண்டுகளுக்கு முன்னால், ஸ்டெர்லைட் ஆலைக்காக நான் போராட்டம் நடத்தியிருக்கிறேன். குரூஸ் பர்னாந்து சிலைக்கு எதிரே நான்கு நாட்கள் நான் தெருவில் கிடந்தேன். ஸ்டெர்லைட் ஆலையைச் சேர்ந்த சிலர், அப்போது என்னைச் சந்திக்க வந்தனர். அவர்கள் டீல் பேச வந்தனர். நான் முடியாது என்றேன். அதன் பிறகு, நான் போட்டியிட்டபோது தேர்தல் செலவுக்குப் பணம் கொடுத்து அனுப்பினார்கள். ஆனால், யார் வந்தார்கள் என்று எனக்கு தெரியாது. நான் வாங்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை, அந்த நிறுவனத்துக்கும் எனக்கும் ஊசி முனையளவுகூடத் தொடர்பு கிடையாது. அன்றைக்கே நான் உண்ணாவிரதம் இருந்து தோற்றுப்போனவன்” என்று தெரிவித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். இதேபோல, கூடங்குளம் அணு உலைக்கு எதிராகவும் ஆரம்ப காலத்தில் தான் போராடியதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசியவர், சட்டமன்றத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டுமென்று கூறினார். ”தேர்தல் ஆணையமும் அரசும் அதுபற்றி யோசித்துக்கொண்டிருக்கின்றன. 365 நாட்களும் தேர்தல் என்று சொன்னால், நாம் எங்கே போவது? இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தலைச் சார்ந்துதான் அரசும் அரசியலும் நடந்து கொண்டிருக்கும். எனவே அது மாற்றத்துக்கான நல்ல முயற்சி” என்றார்.

மேலும், காவிரி மேலாண்மை விவகாரத்தில் போராடிவரும் பாரதிராஜா உள்ளிட்ட இயக்குனர்களுக்குச் சரியான புரிதல் இல்லை என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் பொன்னார். சமூக நலனுக்குக் கேடு விளைவிக்கும் தீய சக்திகள் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதாகவும் தெரிவித்தார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon