மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர்- 11!

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர்- 11!

காங்கிரசை நோக்கி...

ஆரா

பாஜகவுக்கு ஏதேனும் தகவலை பாஸ் செய்ய வேண்டுமென்றால் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மூலமாகத்தான் செய்வார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில்தான்... வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அணி சேர்வதால் தனக்கு எவ்வித சாதகமும் இருக்காது என்பதோடு, பாதகங்களே அதிகம் என்பதை அமைச்சர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கு வெற்றி கிடைத்ததற்கு முக்கியமான காரணம், பாஜகவை அவர் கடுமையாக எதிர்த்து நின்றதும், அதனால் சிறுபான்மை ஓட்டுகள் திமுகவுக்குக்கூடப் போகாமல் அப்படியே தினகரனுக்குச் சென்றதும்தான்.

கடந்த பிப்ரவரியிலிருந்து இந்த ஏப்ரல் வரை ஒரு வருடத்துக்கு மேல் ஆட்சியை ஓட்டியாகிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரலாம் என்று எதிர்பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அப்படி இருக்கையில் இனியும் பாஜகவுக்குப் பல்லக்குத் தூக்க வேண்டுமா என்பதுதான் அவரது எண்ணம். இப்போது என்றில்லை, முன்பே இதுகுறித்த தனது எண்ணங்களை அவ்வப்போது வெளிப்படுத்திவந்திருக்கிறார் எடப்பாடி. ஆனால் இப்போது அதில் அதில் தீவிரமாக இருக்கிறார்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்துக்குள் இருக்கலாம் என்ற நிலையில் இதுவரையில பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு வந்த முதியோர் பென்ஷன், தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட அரசு நலத் திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்த இப்போது உத்தரவிட்டிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்னர் தனது அமைச்சர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “எம்.ஜி.ஆர் பெற்ற தேர்தல் வெற்றியிலெல்லாம் 29 முதல் 34 பர்செண்ட் வரைதான் ஓட்டு வாங்கினார். அம்மா காலத்துல அது சீராக அதிகமாச்சு. வர்ற எலக்‌ஷன்ல திமுக ஒரு அணியா நிக்கும், கமல், ரஜினி தனியா நிப்பாங்க, பாமக ஒரு அணியா நிக்கும். நாமளும் நிற்போம். ஆக ஐந்து முனை தேர்தலாதான் இருக்கும்.

அம்மா எதுக்கும் துணிஞ்சவங்க. 2016ல தனியாவே நின்னு ஜெயிச்சாங்க. ஆனா நான் அம்மா இல்ல, அம்மா மாதிரி கரிஷ்மா எனக்குக் கிடையாது. மக்கள் தலைவர்னு பில்டப்பெல்லாம் கொடுத்துக்க முடியாது. ஆனா, வர்ற தேர்தல்ல தினகரன் இல்லாம பாஜக இல்லாம நாம ஜெயிக்கணும். 29 பர்செண்ட் ஓட்டு வாங்கினா நாம ஆட்சி அமைச்சுடுவோம். அதுக்கு நாம கூட்டணியைப் பத்தி இப்பவே முடிவு செஞ்சாகணும்’’ என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் லேட்டஸ்ட் ஆலோசனை.

அடுத்தடுத்து வளர்ந்த ஆலோசனைகளில் காங்கிரஸோடு கூட்டணி வைக்கலாமா என்பதுதான் எடப்பாடி முன்வைத்த யோசனை.

ஏனெனில் தினகரனும் இப்போதைய காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் திருவாடானை ராமசாமி ஆகியோரும் மிக நெருக்கமாக இருப்பதை அறிந்திருக்கிறார் எடப்பாடி. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று தினகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘அம்மாவின் மாநிலங்களவை முதல் உரைக்காக அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் பாராட்டப்பட்டவர்’ என்ற பழைய வரலாற்றை சுட்டிக் காட்டியிருந்தார். மேலும் அதிமுகவை அடிமைப்படுத்தும் சக்திகளிடம் இருந்து மீட்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார் தினகரன்.

இதன் மூலம் காங்கிரசுடன் கூட்டணி வைத்து பாஜகவை எதிர்கொள்வது என்ற தனது திட்டத்தை, விருப்பத்தை கடந்த பிப்ரவரி 24 அன்றே சூசகமாக சுட்டிக் காட்டியிருந்தார் தினகரன்.

ஆனால், எடப்பாடி பழனிசாமியோ காங்கிரஸோடு கை கோர்ப்பதற்கான சில செயல் திட்டங்களையே வகுத்துக்கொண்டிருக்கிறார்.

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸின் உதவியை நாடுவது, அதற்காக காங்கிரசில் இப்போது இருக்கும் எட்டு சட்டமன்ற உறுப்பினர்களில் இருவருக்குத் தமிழக அரசில் அமைச்சர் பதவி வழங்குவது. இதன் மூலமும் வேறு சில வித்தைகள் மூலமும் ஆட்சியை மெல்ல மெல்ல நகர்த்தி, தேர்தல் வரும்போது அதிமுக காங்கிரஸ் கூட்டணியோடு தேர்தலில் போட்டியிடுவது. இதுதான் இப்போது முதல்வரின் மனதில் ஓடும் திட்டம்.

தமிழகத்தில் 1967க்குப் பிறகு அமைச்சரவையைப் பார்த்திராத காங்கிரஸ் கட்சிக்கு எடப்பாடியின் இந்த ஆஃபர் சற்று ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது என்றாலும், காங்கிரசின் டெல்லித் தலைமை இப்போது திமுகவுடன் உறுதியான கூட்டணியில் இருக்கிறது. அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் பட்சத்தில் தமிழகத்திலிருந்து கணிசமான இடங்களை, ஏன் 2004 போல அனைத்தையும் அள்ளலாம் என்று கணக்கிட்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. தமிழகத்திலிருந்து கிடக்கும் முப்பது முதல் நாற்பது வரையிலான நாடாளுமன்றத் தொகுதிகள் அடுத்த நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிர்ப்பாக இருக்கும் என்பதால் திமுகவுடனான பிடியைத் தற்போது விட்டுத் தர மறுக்கிறது டெல்லி!

இந்த நிலையில் பாஜகவைக் கை கழுவி, காங்கிரசைத் தழுவும் எடப்பாடியின் முயற்சி பலிக்குமா?

(லீக் ஆகும்)

எடப்பாடி லீக்ஸ்-1

எடப்பாடி லீக்ஸ்-2

எடப்பாடி லீக்ஸ்-3

எடப்பாடி லீக்ஸ்-4

எடப்பாடி லீக்ஸ்-5

எடப்பாடி லீக்ஸ்-6

எடப்பாடி லீக்ஸ்-7

எடப்பாடி லீக்ஸ்-8

எடப்பாடி லீக்ஸ்-9

எடப்பாடி லீக்ஸ்-10

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon