மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

கத்துவா வழக்கு: குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்!

கத்துவா வழக்கு: குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்!

காஷ்மீர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று (ஏப்ரல் 16) குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த ஜனவரி மாதம் காஷ்மீர் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் மக்களைக் காக்க வேண்டிய காவல் துறை அதிகாரிகள், சிறார் உட்பட 8 பேர் சம்பந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக காஷ்மீரில் தேசியக் கொடியுடன் பேரணி நடைபெற்றது. அதில் பாஜக அமைச்சர்களும் கலந்துகொண்டனர். மேலும் குற்றவாளிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கத்துவா பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் விசாரணை தொடங்கியுள்ளது. சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகள் இன்று கத்துவா அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அன்கூர் சர்மா, எங்கள் தரப்பில் நார்கோ டெஸ்ட் எடுக்கத் தயார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் வழக்கை 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதற்கிடையே சிறுமி தரப்பு வழக்கறிஞா் தீபிகா சிங் ராவத், “சிறுமிக்கு ஆதரவாக வாதாடுவதால் நான் கொலை செய்யப்படலாம். தொடர்ந்து எனக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. எனவே எனக்கும் சிறுமியின் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜம்மு காஷ்மீரில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்றும், சண்டிகருக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon