மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

நடிகர்கள் மௌனம் காப்பது ஏன்?

நடிகர்கள் மௌனம் காப்பது ஏன்?

சினிமாவில் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.

திரைப்பட வாய்ப்புகளுக்காகத் தெலுங்குத் திரையுலகில் தன் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். அதில் சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டதோடு அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தினார். ஆனால் தெலுங்கு நடிகர்கள் சங்கம் சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசாமல் ஸ்ரீ ரெட்டிக்கு தடை விதித்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு தெலங்கானா தலைமைச் செயலருக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைச் செயலருக்கும் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. இதையடுத்து தெலுங்கு நடிகர் சங்கம், ஸ்ரீரெட்டி மீதான தடையை நீக்கியது.

இந்நிலையில் பெண்கள் அமைப்பு ஹைதராபாத்தில் கருத்தரங்கு ஒன்றை நேற்று (ஏப்ரல் 16) நடத்தியது. இதில் நடிகை ஸ்ரீரெட்டி மற்றும் ஏராளமான துணை நடிகைகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீரெட்டி, "சினிமாவில் பாலியல் ரீதியாக என்னைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று நான் வெளிப்படுத்தியதால், அவர்கள் என்னைப் பாலியல் தொழிலாளியாக அடையாளப்படுத்தப் பார்க்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் சினிமா துறையைச் சார்ந்த ஒருவரும் எனக்கு ஆதரவு அளிக்காதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் அநியாயத்தைக் கண்டால் ஹீரோக்கள் வீரம் காட்டுகிறார்கள். ஆனால் இதுவே சமூகத்தில் அநீதி நடக்கும்போது அவர்களின் வீரம் எங்கே போய்விடுகிறது என்று தெரியவில்லை. இது போன்ற விஷயத்தில் அவர்கள் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்? சினிமா தொழில் எங்களை பாலியல் சுரண்டலுக்குத் தள்ளியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆந்திர மற்றும் தெலங்கானா முதல்வர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலுங்கு பேசும் துணை நடிகைகளுக்கு மாதத்தில் 10 நாட்களாவது வேலை கொடுக்க வேண்டும்; குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அந்த நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்டது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon