மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

ஃபுட் கோர்ட்: உலக மக்கள் விரும்பும் பீட்சாவின்வரலாறு!

ஃபுட் கோர்ட்: உலக மக்கள் விரும்பும் பீட்சாவின்வரலாறு!

பீட்சா, உலகமெங்கிலும் விரும்பிச் சாப்பிடப்படும் புகழ்பெற்ற இத்தாலிய உணவு. கடைக்கு நேரில் சென்றுதான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமலும், வீட்டுக்கே வந்து ஹோம் டெலிவரி செய்வதாலும், பீட்சா அனைவர் மத்தியிலும் எளிதில் பிரபலமானது. தற்போது எல்லா ஹோட்டல்களிலும் டோர் டெலிவரி முறை இருப்பதற்கு முன்னோடியாக பீட்சாவைத் தான் சொல்ல வேண்டும். தற்போது டூவீலரில் சூடாக, சுவையாக வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் பீட்சாவுக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு.

பீட்சா முதலில் எங்குத் தயாரித்து உண்ணப்பட்டது என்பதற்குப் பல கதைகள் இருந்தாலும், எகிப்தியர்களிடம் இருந்து உருவானதாக பொதுவாக சொல்லப்படுகிறது. கி.மு.500இல் பெர்சிய படை வீரர்கள் பீட்சா தயாரித்து சாப்பிட்டுள்ளனர். தற்போது தட்டையான பிரெட் மீது தக்காளி சாஸ், சீஸ், வெங்காயம், மிளகாய் என்று சேர்த்து தயாரிப்பது போல், அந்த காலத்தில் பிரெட் மீது பேரீச்சம் பழம், சீஸ் ஆகியவற்றை வைத்துத் தயாரித்துள்ளனர். போர்க்களத்தில் வீரர்கள் தங்களின் கேடயங்களைப் பயன்படுத்தி பீட்சா தயார் செய்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

பீட்சாவின் தோற்றம் அரபு நாடுகளில் இருந்து உருவாகி, பின்னர் கிரேக்கத்தை நோக்கி நகர்ந்தது என்பதைப் பலரும் ஏற்க மறுக்கின்றனர். பீட்சா இத்தாலியில்தான் உருவானது என்றும் கி.மு முதலாம் நூற்றாண்டின்போதே இறைச்சி, உருளைக்கிழங்கு, ஆலிவ் ஆகியவற்றைச் சேர்த்து வட்ட வடிவிலான பீட்சாவைத் தயாரித்ததாகக் கிரேக்கர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

2,800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நேப்பிள்ஸ் ஒரு துறைமுக நகராகவும், வணிகக் கேந்திரமாகவும் விளங்கியது. வணிகம் செழிப்பாக நடைபெற்ற காலத்தில், அங்கு பெரும்பாலும் உயர்வகுப்பு குடிமக்கள் வசித்தார்கள். அதன் பிறகே சாலையோர கடை மற்றும் ரெஸ்டரன்ட்களில் பீட்சாவை விற்கத் தொடங்கினர். தொடக்கக் காலத்தில், தக்காளி சாஸ் சேர்த்து பீட்சா தயாரிக்கப்படவில்லை. பெருவிலிருந்து தக்காளி ஐரோப்பாவுக்கு அறிமுகமான பின்னர், பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்துதான், ஐரோப்பிய உணவு பயன்பாட்டில் தக்காளி சாஸ் இருந்து வருகிறது.

19ஆம் நூற்றாண்டில் பீட்சா புது வடிவம் பெற்றது. தட்டையான பிரெட் உடன் சீஸ் சேர்த்துத் தயாரிப்பது போதுமானதாக இல்லை என்பதால், இத்தாலியைச் சேர்ந்த ரபேல் எஸ்பிசிடோ என்பவர் பீட்சாவுடன் சாஸ் சேர்த்துத் தயாரித்தார். இந்த தயாரிப்பு முறை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 1889இல் இத்தாலியின் அரசராகப் பதவியேற்ற முதல் உம்பெர்டோ மற்றும் அரசி மார்கெரிட்டாவுக்கு, பீட்சா தயாரிக்க பணிக்கப்பட்டார் ரபேல். இத்தாலி கொடி போன்று தயாரிக்கப்பட்ட பீட்சா அரசிக்கு மிகவும் பிடித்துப் போனது. அதன் பிறகுதான் தக்காளி சாஸ், மோசரெல்லா சீஸ் உடன் துளசி இலைகள் சேர்த்து தயாரிக்கப்படும் பீட்சா, மார்கெரிட்டா என்ற அழைக்கப்படலாயிற்று. அதன் பிறகு நேப்பிள்ஸ் தாண்டி உலகம் முழுவதும் பீட்சாவின் புகழ் பரவத் தொடங்கியது. ஆக, நவீன பீட்சாவின் தந்தை என்று ரபேல் அழைக்கப்படுகிறார்.

19ஆம் நூற்றாண்டில் தெற்கு இத்தாலியிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைத்தேடி புலம்பெயர்ந்து சென்றவர்கள், தங்களுடன் பீட்சா உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகளையும் கொண்டு சென்றனர். இதனால் அமெரிக்காவிலும் பீட்சா பிரபலமானது. ஜென்னரோ லோபார்டி என்பவர் 1905ஆம் ஆண்டு மன்ஹாட்டன் பகுதியில் முதல் பீட்சா கடையைத் திறந்தார். இத்தாலியைச் சேர்ந்தவர்களைவிட அமெரிக்கர்களை பீட்சா வெகுவாக கவர்ந்தது. அமெரிக்க மக்களிடையே பிரபலமடைந்ததால், 1920ஆம் ஆண்டு பீஸ்ஸாரியாக்கள் அமெரிக்கா முழுவதும் பரவ தொடங்கின.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பீட்சாவின் புகழ் உலகெங்கும் பரவியது. இத்தாலியில் மேலும் புது வடிவம் பெற்று பல்வேறு வகைகளில் பீட்சா தயாரிக்க தொடங்கினர். உலகம் முழுதும் பீட்சா பிரபலமடைய டாமினோஸ், பீட்சா ஹட் போன்ற நிறுவனங்கள் மட்டுமே காரணம் அல்ல. கார்ட்டூன் சேனல்கள் மூலமாகவும் குழந்தைகள் பீட்சா உணவைப் பற்றி தெரிந்து கொண்டனர். குறைந்த நேரத்தில் தயார் செய்து, விரைவில் கிடைத்துவிடுவதால் பீட்சாவுக்கு டிமாண்ட் அதிகமானது.

80களின் நடுவில் இந்தியாவுக்குள் பீட்சா நுழைந்தது. பீட்சாவை பேக்கரிகளிலும் தென்னிந்திய ரெஸ்டரென்ட்களிலும் விற்பனை செய்து வந்தனர். 90களில் டெல்லியிலும் கொல்கத்தாவிலும் பல ரெஸ்டரென்ட்களில் பீட்சா டெலிவரி செய்யும் சேவை தொடங்கப்பட்டது. அதன் பின்னர் பீட்சா ஹட் இந்தியாவுக்குள் தங்களின் கிளைகளைப் பரப்ப தொடங்கிய பிறகு, 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டாமினோஸின் ஆதிக்கம் தொடங்கியது. தற்போது பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் பீட்சா கடைகளைத் திறந்துள்ளனர். இந்திய மக்களைக் கவர்வதற்காக பன்னீர், கெபாப் போன்ற பொருள்களைக் கொண்டு உள்ளுர் சுவைகளிலும் பீட்சாகளைத் தயாரித்து வழங்குகின்றனர்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon