மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில், தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூடத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

கடந்த பிப்ரவரி 16 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதைச் செயல்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக பிப்ரவரி 23 அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதென்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் பிப்ரவரி 22ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

காவிரி தொடர்பாக எடுக்கப்பட்ட எந்தத் தீர்மானத்தையும் அரசு செயல்படுத்தாத காரணத்தால் மு.க ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 1 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்வது ,சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி திருச்சி முக்கொம்பு முதல் சென்னை வரை நான்கு கட்டமாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சியினர் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

ஏப்ரல் 13ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலாலை எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சந்தித்த ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு மனு ஒன்றை அளித்தார்.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 9 கட்சித் தலைவர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கில் இன்று நடக்க உள்ளது. இதில், காவிரி பிரச்சினைக்கான அடுத்த கட்டப் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மே 3ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசுக்கு வலியுறுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon