மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

சிறுவர்களின் உலக சாதனை!

சிறுவர்களின் உலக சாதனை!

சங்கரன்கோவில் அருகே 7 வயது சிறுவன் ஸ்கேட்டிங்கில் 10 கிலோ மீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த ஊத்துமலையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஆதவன். ஸ்கேட்டிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், 10 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியைத் தமிழக அமைச்சர் ராஜலெட்சுமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் துவக்கிவைத்தனர்.

சங்கரன்கோவிலில் இருந்து புறப்பட்டு பாட்டத்தூர், இராமநாதபுரம் விலக்கு, மலையான்குளம் உள்ளிட்ட இடங்களில் 6 வேகத் தடைகளைக் கடந்து, செவல்குளம் விலக்கு பகுதியை 35 நிமிடங்களில் கடக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், குறித்த நேரத்திற்கு முன்னதாக 32 நிமிடம் 48 வினாடிகளில் இலக்கைக் கடந்து உலக சாதனை படைத்தார். 2016ஆம் ஆண்டு கோவை மாணவி தஸ்வினி இதே தூரத்தை 42 நிமிடங்களில் கடந்திருந்தார்.

கனடாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யுனிவெர்சல் புக் ஆஃப் ரெக்கார்டஸ் என்ற அமைப்பு ஆதவனின் ஸ்கேட்டிங் சாதனையை உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.

அதே போல் ஆப்பிரிக்காவின் டான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலைச்சிகரத்தின் மீது ஏறி ஹைதராபாத்தைச் சேர்ந்த சமன்யு போத்துராஜ் என்ற சிறுவன் சாதனை படைத்துள்ளான்.

ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலைச்சிகரமான கிளிமஞ்சாரோ, கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து மார்ச் 29ஆம் தேதி சமன்யு, அவரது தாய் லாவண்யா, பயிற்சியாளர் தம்மிநேணி, ஒரு மருத்துவர் உட்பட ஐவர் கொண்ட குழுவுடன் மலையேற்றத்துக்குச் சென்றார்.

தாய் லாவண்யாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பாதியிலேயே திரும்பிவிட்டார். ஆனாலும் மனம் தளராத சிறுவன் சமன்யு கடந்த 2ஆம் தேதி உகுரு சிகரத்தை வெற்றிகரமாக அடைந்து உலக சாதனை படைத்தார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon