மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

இரண்டு முறை பாடப்பட்ட தேசிய விருதுப் பாடல்!

இரண்டு முறை பாடப்பட்ட தேசிய விருதுப் பாடல்!

கே.ஜே.யேசுதாஸ் எட்டாவது முறையாக தேசிய விருது வென்று சாதனை படைத்திருக்கிறார். வெண்தாடியுடன் முதுமையை வெளிப்படுத்தினாலும், அதே வெள்ளை நிற ஜிப்பாவும், சீரிளமை மிகுந்த குரல் வளத்துடனும் இப்போதும் பாடிவரும் யேசுதாஸ் தேசிய விருது வென்ற ‘போய் மறஞ்ச காலம்’ பாடலை இரண்டு முறை பாடியிருக்கிறார்.

‘விஸ்வாசபூர்வம் மன்சூர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற போய் மறஞ்ச காலம் பாடலை பிரேம்தாஸ் குருவாயூர் எழுத ரமேஷ் நாராயணன் இசையமைத்தார். யேசுதாஸ் இந்தப் பாடலைப் பாடினால் நன்றாக இருக்குமென முடிவெடுத்து அவரைத் தொடர்புகொண்டபோது நடைபெற்ற சம்பவங்களை, தேசிய விருது அறிவிப்புக்குப் பிறகாக ரமேஷ் பகிர்ந்துகொண்டார்.

“தாஸேட்டன் பாடும் இந்தப் பாடலை மும்பையில் ரெகார்டிங் செய்ய விருப்பப்பட்டோம். ஆனால், அவ்வளவு தூரம் பயணிக்க அவர் அசௌகரியமாக உணர்ந்ததால் சென்னையிலேயே ரெகார்ட் செய்தோம். அவர் வந்து வரிகளைப் படித்து, இசையைக் கேட்டதும் மிகவும் பூரித்துப்போனார். உடனே பாடலைப் பாடி ரெகார்டிங் செய்து முடித்தோம். அதன் பிறகு ஒரு வாரம் சென்ற நிலையில், திடீரென தாஸேட்டனிடம் இருந்து ஃபோன் வந்தது. ‘ரமேஷ், அந்தப் பாடல் ரெகார்டிங் சிறப்பாக இருந்தது. ஆனால், அதில் சில பகுதிகளை என்னால் மேலும் சிறப்பாகப் பாட முடியும் என நினைக்கிறேன். நான் வந்து பாடிக் கொடுக்கிறேன். எது நன்றாக இருக்கிறதோ அதை வைத்துக்கொள்ளலாம்’ எனக் கூறினார். எனவே, அந்தப் பாடல் மீண்டும் ரெகார்ட் செய்யப்பட்டது. முன்பு பாடியதற்கும், இரண்டாவது பாடலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. ஆனால், அவர் எங்கு மாற்றங்களைச் செய்தார் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. அது அவரால் மட்டுமே கண்டுபிடிக்கக்கூடிய மாயாஜாலம்” என்று இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணன் கே.ஜே.யேசுதாஸுடனான தேசிய விருதுப் பாடல் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

யேசுதாஸ் தேசிய விருது பெற்ற பாடல்

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon