மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

டெல்லியில் செல்லகுமார், டென்ஷனில் திருநாவுக்கரசர்

டெல்லியில் செல்லகுமார், டென்ஷனில் திருநாவுக்கரசர்

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டினார் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர்.

அப்போது, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கூட்டத்தைப் புறக்கணித்தது பற்றியும், அக்கூட்டத்தில் திருநாவுக்கரசர் கடுமையாக உணர்ச்சிவசப்பட்டு பேசியதையும் மின்னம்பலம்.காம் தமிழின் மொபைல் பத்திரிகையில் ஏப்ரல் 7-ம் தேதி டிஜிட்டல் திண்ணையில் வெளியிட்டிருந்தோம்.

அந்த கூட்டத்தில் அறிவித்தபடி தமிழகம் முழுக்க பூத் வாரியாக சுற்றுப்பயண நிகழ்ச்சியை நேற்று (ஏப்ரல் 15) சென்னை கிழக்கு மாவட்டத்தில் இருந்து துவக்கினார் திருநாவுக்கரசர். ஆனால் அந்தக் கூட்டத்தைப் போலவே முன்னாள் மாநிலத் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் கலந்துகொள்ளாமல் இந்தக் கூட்டத்தையும் புறக்கணித்தனர். ஜே.எம்.ஆரூண், ராசிபுரம் ராணி உள்ளிட்ட சிலரே இதில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள்.

’’மாவட்ட வாரியாக சென்று பூத் கமிட்டி மெம்பர்களை சந்தித்து என முடிவெடுத்து அதற்கென ஒரு சுற்றுப் பயணத்தைத் திட்டமிட்டு முன்கூட்டியே அறிவித்து அதன்படிதான் இந்த பயணத்தையே துவக்கியிருக்கிறார். மேலிடப் மாநிலப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் அனுமதி பெற்றுதான் இந்த பிரசாரப் பயணத்தையே துவக்கினார் திருநாவுக்கரசர். ஆனாலும் இந்தத் துவக்க விழாவுக்கும் யாரும் வராதது திருநாவுக்கரசரை டென்ஷன் ஆக்கியிருக்கிறது’’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

அதேநேரம்... காங்கிரஸ் அகில இந்திய செயலாளராகவும், கோவா மாநிலப் பொறுப்பாளராகவும் இருக்கும் டாக்டர் செல்லகுமார் கடந்த சில நாட்களாக தமிழக காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், அவருக்கு டெல்லி கொடுக்கும் முக்கியத்துவமும்தான் இப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே பரபரப்பை மூட்டியிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 9-ம் தேதியன்று எஸ்சி சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க உண்ணாவிரதம் நடத்தியது. கோவாவில் ஏற்பாடான உண்ணாவிரத்தில் கலந்துகொள்ள பிளைட் டிக்கெட் எல்லாம் எடுத்துவிட்டார் டாக்டர் செல்லகுமார். ஆனால் திடீரென அவரை சென்னையில் கலந்துகொள்ளுங்கள் என்று டெல்லி உத்தரவிட்டது. அதேபோல பிரதமர் மோடி வருகைக்கு எதிராக தமிழக காங்கிரஸ் நடத்திய கறுப்புக் கொடி போராட்டத்திலும் செல்லகுமார் கலந்துகொண்டார்.

செல்லகுமார் திமுகவுக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர் என்றும், அதனால் தற்போதைய சூழலில் அவர் மாநிலத் தலைவர் ஆக நியமிக்கப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி சரியாக இருக்காது என்று சொல்லி செல்லகுமாருக்கு எதிர்க்கோஷ்டியினர் டெல்லிக்கு புகார்களை அனுப்பினர். இதுபற்றி டெல்லிமேலிடம் செல்லகுமாரிடம் கேட்டபோது, ‘நான் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்குக் கட்டுப்பட்டவன். தேசிய தலைமை என்ன சொல்கிறதோ அதைதான் இதுவரை செய்துகொண்டிருக்கிறேன். இனியும் செய்வேன். எனக்கென தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கட்சியில் திணிக்கமாட்டேன்’என்று பதில் அளித்திருக்கிறார்.

இந்நிலையில் ஏப்ரல் 12-ம் தேதி பிரதமர் மோடிக்கு எதிராக திமுக செயல் தலைவர் அழைப்பு விடுத்த வீட்டுக்கு வீடு கறுப்புக் கொடி போராட்டத்தை ஏற்று சென்னை அண்ணாநகரில் உள்ள தன் வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றி, தான் திமுகவுக்கு எதிரானவன் அல்ல என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் செல்லகுமார். இதன் பிறகு ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த தின விழாவிலும் சென்னையில் கலந்துகொள்ளுமாறு தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை கோயம்பேட்டிலும் திருநாவுக்கரசருடன் கலந்துகொண்டார் செல்லகுமார்.

இவ்வாறு கடந்த ஒருவாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் டாக்டர் செல்லகுமாரும் அவரோடு கலந்துகொண்டு வருகிறார். இதுபற்றி திருநாவுக்கரசரிடமே பவன் நிர்வாகிகள் விசாரிக்க இதற்கு அவர் பதிலேதும் சொல்லவில்லையாம்.

இவ்வாறு வரிசையாக தமிழகத்தில் செல்லகுமாருக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டு வந்த நிலையில்... நேற்று (ஏப்ரல் 15) தலைமையின் அழைப்பை ஏற்று டெல்லி சென்றுள்ளார் செல்லகுமார். அனேகமாக இன்று செல்லகுமார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்கலாம் என்கிறார்கள் பவன் வட்டாரத்தில்.

செல்லகுமார் டெல்லியில் இருக்க, திருநாவுக்கரசர் டென்ஷனில் இருக்க, திமுக இதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon