மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

மீண்டும் சாமுண்டீஸ்வரி: களமிறங்கும் சித்தராமையா

மீண்டும் சாமுண்டீஸ்வரி: களமிறங்கும் சித்தராமையா

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்வர் சித்தராமையா 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் களமிறங்கவுள்ளார்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பாளர் மனு தாக்கல் நாளை (ஏப்ரல் 17) தொடங்குகிறது. இந்நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி 218 பேரின் பெயர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் 12 ஆண்டுகள் கழித்து போட்டியிடுகிறார். முன்னதாக அவர் அங்கு 7 முறை போட்டியிட்டதில் 5 முறை வெற்றி கண்டுள்ளார்.

இரண்டு தொகுதிகளில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைமையின் வலியுறுத்தல் காரணமாக ஒரு தொகுதியில் மட்டும் அவர் களமிறங்கவுள்ளார். கடந்த முறை சித்தராமையா போட்டியிட்டு வென்ற வருணா தொகுதியில் அவரது மகனான யதீந்திரா போட்டியிடவுள்ளார். எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே, பாஜக கட்சி 72 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தது. ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா போட்டியிடுகிறார், மீதமுள்ள தொகுதிகளுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், கர்நாடக தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஜனதா தளம் கட்சி 126 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon