மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 மே 2020

வழக்கறிஞர் (?) வீட்டில் சிலைகள் கண்டெடுப்பு!

வழக்கறிஞர் (?) வீட்டில் சிலைகள் கண்டெடுப்பு!

நாமக்கல் அருகே மோசடி வழக்கில் வாதாடிவந்த வழக்கறிஞர் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம் ஆண்டகளூர் கேட் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், மோசடி வழக்கு ஒன்றிற்காக, வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு வலம்வந்த வின்ஸ்டன் சர்ச்சில் என்பவரை அமர்த்தியுள்ளார். இந்த வழக்கிற்காக வின்ஸ்டன், ரமேஷிடமிருந்து 35 லட்ச ரூபாய் வரை பெற்றுள்ளார். ஆனால் வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் சந்தேகமடைந்த ரமேஷ் வழக்கறிஞர் குறித்து விசாரித்துள்ளார். அப்போதுதான் அவர் போலி வழக்கறிஞர் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தன்னுடைய பணத்தைப் பெற்றுத் தருமாறு ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பூட்டியிருந்த வின்ஸ்டனின் வீட்டை உடைத்துப் பார்த்துள்ளார். அப்போது ஏராளமான சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து ரமேஷ் காவல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் நேற்று (ஏப்ரல் 18) காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது கல்லால் ஆன 7 சாமி சிலைகள், உலோகத்தால் செய்யப்பட்ட அலங்கார வளைவு உள்ளிட்டவை சர்ச்சிலின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர், பண மோசடி செய்த அந்தப் போலி வழக்கறிஞர் குறித்தும் சிலைகளை அவர் பதுக்கிவைத்திருந்தது குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon