மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

சமூக வலைதளம் மூலம் அணுக முடியாது!

சமூக வலைதளம் மூலம் அணுக முடியாது!

காவிரி விவகாரத்தைச் சட்ட ரீதியாகத் தீர்க்க முடியுமே தவிர ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அணுக முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 15) செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி மேலாண்மை விவகாரம் தொடர்பாகப் பிரதமரிடம் மனுதான் அளிக்க முடியும். வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் அணுக முடியாது. இது சட்ட ரீதியாக அணுக வேண்டிய பிரச்சினை. அந்த அடிப்படையில்தான் பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டது. அதுதான் ஆதாரம்.

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவின்போது வலியுறுத்தினோம். இப்போது கொடுத்திருக்கும் மனுவில், தமிழகத்தின் உரிமைகளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கொடுத்திருக்கிறது. அதைச் செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம்.

உச்ச நீதிமன்றம்தான் அதிகாரம் படைத்த அமைப்பு. மே 3ஆம் தேதிக்குள் வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் தமிழக அரசைச் சார்ந்தவர்கள் பணம் வாங்கியதாக கூறப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கும் “2011ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை மேற்கொண்டதே அதிமுக அரசுதான். பணம் வாங்கியிருந்தால் ஆலையை மூடியிருக்க முடியுமா?

ஜெயலலிதா பொறுப்பில் இருந்தபோதுதான் ஆலை மூடப்பட்டது. பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து, தீர்ப்பின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தற்போதும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்று பதிலளித்தார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் டி.டி.வி அணியினர் இரட்டை இலையைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது கற்பனையான ஒன்று என்று குறிப்பிட்ட முதல்வர், “ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தார்கள் என்று ராமமோகன ராவ் கூறியது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு, யாரையோ தப்பிக்க வைப்பதற்காகத் தவறான செய்தியைக் கூறி வருகிறார்” என்று தெரிவித்தார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon