மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

தயாரிப்பாளராகும் சதா

தயாரிப்பாளராகும் சதா

டார்ச் லைட் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அப்துல் மஜீத் இயக்கும் புதிய படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் நடிகை சதா.

நடிகைகள் திரைத் துறையைத் தாண்டி அழகு நிலையம், ரியல் எஸ்டேட் , பொடீக் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஒருசிலர் திரைத் துறையை விட்டு அகலாமல் தயாரிப்பாளராகிவிடுகின்றனர். ஏற்கனவே சில நடிகைகள் நேரடியாகவும் தம் உறவினர், நண்பர்கள் மூலமாகவும் படங்களைத் தயாரித்துவருகின்றனர். தற்போது நடிகை சதாவும் தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

சதா பாலியல் தொழிலாளியாக நடித்துவரும் திரைப்படம் 'டார்ச் லைட்' . இப்படத்தை விஜய்யை வைத்து 'தமிழன் 'படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இயக்குகிறார். கான்ஃபிடன்ட் ஃபிலிம் கேஃப் நிறுவனம், ஆர்.கே. ட்ரீம் வேர்ல்டு, ஒயிட் ஸ்க்ரீன் என்டர்டெய்ன்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.

இது பற்றி இயக்குநர் அப்துல் மஜீத் பேசும்போது, "நான் முதலில் இயக்கிய ’தமிழன்’ படம் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை சட்ட அறிவு அவசியம் தேவை என்று கூறியது. அது பரவலான பாராட்டு பெற்றது மட்டுமல்ல பெரிய வெற்றியும் பெற்றது. அதன் பிறகு சில சிறிய படங்கள் இயக்கினேன். ஆனால் டார்ச் லைட்டுக்கான விஷயம் மனதில் பதிந்தபோது இது என் லட்சியப் படமாகத் தெரிந்தது. நிச்சயமாக இப்படிப்பட்ட சமூக அவலத்தைச் சொல்லி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியது. வறுமையைப் பயன்படுத்திப் பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் .இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசிப் பதிவு செய்திருந்தேன்" என்று தெரிவித்தார்.

"நான் பல நடிகைகளிடம் இந்தக் கதையைக் கூறியபோது பாலியல் தொழிலாளியாக நடிக்க வேண்டுமே என்று பலரும் மறுத்துவிட்டனர். இப்படி 40 பேரிடம் சொல்லியிருப்பேன். கடைசியில் சதாவிடம் கூறினேன். கதையைக் கேட்டு முடித்ததும் கண்ணீர் விட்டார். வீடியோ பதிவுகளை எல்லாம் பார்த்துவிட்டுக் கலங்கினார். தானே நடிப்பதாகக் கூறினார். இப்படம் சதா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். இந்தப் படத்தின் மூலம் சதாவுக்கு என் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் என் அடுத்த படத்தை அவரே தயாரிக்கவுள்ளார். அது குறித்து அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon