மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 19 பிப் 2020

நீரவ் மோடிக்கு உதவிய இந்திய வங்கிகள்!

நீரவ் மோடிக்கு உதவிய இந்திய வங்கிகள்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடி செய்த வழக்கில் சிக்கிய நீரவ் மோடிக்கு மேலும் ஐந்து வங்கிகள் உதவியிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி அவரது உறவினருடன் சேர்ந்து போலி ஆவணங்களைக் கொண்டு ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்று விட்டார். அவர் ஹாங்காங்கில் தற்போது வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரைக் கைது செய்யவும், கடனை வசூலிக்கவும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் முயன்று வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள நீரவ் மோடியின் நிறுவனங்கள் வாயிலாக முறைகேடாகக் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கையில் நீரவ் மோடிக்கு மேலும் ஐந்து இந்திய வங்கிகள் உதவியிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சிண்டிகேட் பேங்க், ஆக்சிஸ் பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய ஐந்து வங்கிகளும் ரவுண்ட் டிரிப் முறையில் பஞ்சாப் நேஷனல் வங்கியால் வழங்கப்பட்ட ரூ.6,000 கோடி கடனை அனுபவிக்க நீரவ் மோடிக்கு உதவியதாக அமலாக்கத் துறையினர் இவ்வங்கிகளிடையே விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். மேலும், பெல்ஜியத்தில் 10, நெதர்லாந்தில் 8, அமெரிக்காவில் 3, ஐக்கிய அரபு அமீரகத்தில் 13 என நீரவ் மோடி சம்பந்தப்பட்ட மொத்தம் 47 நிறுவனங்கள் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் பெற்ற புரிந்துணர்வுக் கடிதத்தின் வாயிலாக மேற்கூறிய நிறுவனங்களுக்குப் பணத்தை மாற்ற நீரவ் மோடி முயற்சித்தது தெரியவந்துள்ளது.

(ரவுண்ட் டிரிப் என்பது இந்தியாவில் உள்ள பணத்தை வெளிநாட்டிலுள்ள [மொரீஷியஸ்] நிறுவனங்களுக்கு முதலில் மாற்றுவது. இதனை வங்கிகள் வழியாகவே அனுப்புவதும் நடைபெறுகிறது. பின்னர் அந்தப் பணம் மொரீஷியஸ் நிறுவனம் இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்வதாகக் காண்பிக்கப்பட்டு மீண்டும் இங்கு கொண்டுவரப்படும். இதற்கு ரவுண்ட் டிரிப் [round trip] என்று பெயர். இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்படும் பணம் கறுப்புப் பணமாகவோ மோசடிப் பணமாகவோ இருக்கும். ஒரு சுற்று வெளிநாடு சென்று மீண்டுவிட்டால் அப்பணம் நல்ல பணமாக அல்லது வெள்ளைப் பணமாக மாறிவிடும். அதனை வேறு ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்துவிட்டால் மோசடிப் பணத்தை மீட்க முடியாது. கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிக்கவும் முடியாது.)

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon