மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

மேற்குத் தமிழகத்தைக் குறிவைக்கும் கமல்

மேற்குத் தமிழகத்தைக் குறிவைக்கும் கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மே 11ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் கோயம்புத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மதுரையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மையம் என்ற தனது கட்சி பெயரையும் கட்சிக் கொடியையும் கமல்ஹாசன் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையும் நடத்தி வருகிறார். மதுரைக்குப் பின்னர் அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறும் என அறிவித்த கமல் அதற்கு முன்னதாகவே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உலக மகளிர் தின விழாவை நடத்தினார்.

தனக்குக் கூடும் உண்மையான கூட்டத்தைக் காண திருச்சி பொதுக்கூட்டத்துக்கு வாருங்கள் எனச் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றின்போது கமல் கூறியிருந்ததால், பொதுக்கூட்டத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராகத் தமிழகம் ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும் என்று கமல் குறிப்பிட்டிருந்தார்.

தெற்கு மற்றும் மத்திய தமிழகத்தைத் தொடர்ந்து தற்போது மேற்குத் தமிழகத்தில் தனது மூன்றாவது பொதுக்கூட்டத்தை கமல் நடத்தவுள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர் தங்கவேலு வெளியிட்ட அறிவிப்பில், ‘மே 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கமல்ஹாசன் மே 13ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon