மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

ஐபிஎல்: அதிரடியால் வந்த வெற்றிகள்!

ஐபிஎல்: அதிரடியால் வந்த வெற்றிகள்!

ஐபிஎல் தொடரில் பொதுவாக சேஸிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனாலே டாஸ் ஜெயிக்கும் அணிகள் பந்து வீச்சைத் தேர்வு செய்கின்றன. நேற்று நடைபெற்ற இரு போட்டிகளிலும் டாஸ் வென்ற அணிகள் பந்து வீச்சையே தேர்வு செய்தன. ஆனால், முடிவு வேறு மாதிரியாக அமைந்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 45 பந்தில் 2 பவுண்டரி, 10 சிக்சருடன் 92 ரன்கள் அடித்து அணியின் ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

பின்னர் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பிராண்டன் மெக்கல்லம், குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார்கள். நான்கு ரன்கள் எடுத்த நிலையில் மெக்கல்லம் முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார்.

அடுத்து குயின்டான் டி காக் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 8 ஓவரில் 81 ரன்னாக இருக்கும்போது டி காக் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். 26 பந்தில் அரை சதம் அடித்த விராட் கோலி 30 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10.2 ஓவரில் 101 ரன்கள் எடுத்திருந்தது.

விராட் கோலி வெளியேறியதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஸ்கோர் சரிய ஆரம்பித்தது. டி வில்லியர்ஸ் 18 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நெஹி 3 ரன்னில் ஆட்டமிழக்க, 6ஆவது விக்கெட்டுக்கு மந்தீப் சிங் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார்.

16ஆவது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரில் பெங்களூர் அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17ஆவது ஓவரை உனாத்கட் வீசினார். இந்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், மந்தீப் சிங் இரண்டு பவுண்டரிகள் விளாசினார்கள்.

கடைசி மூன்று ஓவரில் பெங்களூர் அணிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டன. 18ஆவது ஓவரை லாக்லின் வீசினார். இதில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ் அடிக்க பெங்களூர் அணி 13 ரன்கள் சேர்த்தது.

கடைசி 2 ஓவரில் 48 ரன்கள். 19ஆவது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கும், 2ஆவது பந்தை சிக்சருக்கும் தூக்கினார் வாஷிங்டன் சுந்தர். 5ஆவது பந்தில் க்ளீன் போல்டானார். வாஷிங்டன் சுந்தர் 19 பந்தில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 35 ரன்கள் சேர்த்தார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் களமிறங்கினார். கடைசி பந்தில் இவர் ரன் அடிக்கவில்லை.

கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவை. ஆனால் 16 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் 8ஆவது ஓவரில் எளிதாக 96 ரன்களை கடந்தது.

37 ரன்கள் எடுத்து லோகேஷ் ராகுல் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய கெயில் 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய மாயங்க் அகர்வால் சற்றே அதிரடி காட்ட பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. எதிர்பார்ப்புடன் களமிறங்கிய யுவராஜ் சிங் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய கருண் நாயர் அதிரடியாக விளையாடி 29 ரன் எடுத்து வெளியேறினார். இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது.

சென்னை அணி தரப்பில் தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், முரளி விஜய் ஆடினர். வாட்சன் 11 ரன்னிலும், முரளி விஜய் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடு 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த சாம் பில்லிங்ஸ் 9 ரன்னில் ஆட்டமிழக்க சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்துக் களமிறங்கிய கேப்டன் மகேந்திர சிங் தோனியும் ரவீந்திர ஜடேஜாவும் வேகமாக ரன் குவிக்கும் முயற்சியில் இறங்கினர். கடைசி 5 ஓவர்களில் 76 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் இணைந்து 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா 19 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய தோனி அரை சதமடித்தார். அடுத்து பிராவோ இறங்கினார். தோனி தனது அதிரடியைத் தொடர்ந்தார். இதனால் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் இறுதி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை அணி தோல்வியைத் தழுவியது. தோனி 44 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

நேற்று நடைபெற்ற இரு போட்டிகளிலும் இமாலய ஸ்கோர் நிர்ணயிக்கப்பட்டாலும் கடைசி ஓவர் வரை பரபரப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon