மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

அழகு க்ரீம் வாங்க மருத்துவரின் பரிந்துரை அவசியம்!

அழகு க்ரீம் வாங்க மருத்துவரின் பரிந்துரை அவசியம்!

தொலைக்காட்சிகளில் அழகு க்ரீம் குறித்த விளம்பரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? வெள்ளையான சருமம் உள்ள பெண்தான் நேர்காணலில் தேர்வு பெறுவார். அழகான பெண்கள் மட்டும்தான் தன்னம்பிக்கை கொண்டவர்கள் போல காட்டுவார்கள். கறுப்பு நிறத்தவர்கள் தன்னம்பிக்கை உடையவர்களல்ல என்றும், அவர்கள் தோல்வியைச் சந்திப்பார்கள் என்றும் கறுப்பாக உள்ளவர்கள் நினைக்கும் அளவுக்கு விளம்பரத்தைப் பரப்புவார்கள். காரணம், அப்போதுதான் அவர்களும் இவர்களது அழகு க்ரீமை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இதை நம்பி சிலர் அந்தப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இதுதான் விளம்பரத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. அப்படிப் பயன்படுத்துவதால் பலருக்கு உடலில் பாதிப்பு ஏற்படுகிறது.

பல அழகு க்ரீம்களில் ஸ்டெராய்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது தோலில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியவை. தோல் நோய்கள், பருக்கள், முகத்தில் எரிச்சலும் ஏற்படும். இந்த மாதிரியான க்ரீம் போட்டு வெயிலில் போகும்போது பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமில்லாமல், சிலருக்கு முகத்தில் முடி வளரும். க்ரீம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டாலும் அதைக் குணப்படுத்த முடியாது என டாக்டர் கிரண் நபர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய பக்க விளைவுகளைக் கருத்தில்கொண்டு, மகாராஷ்டிராவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) இந்த அங்கீகாரமற்ற மருந்துகளைப் பயன்படுத்துவதைப் பற்றி அரசுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்துடன் ஆலோசனை நடத்தி, மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகள் 1945இன் அட்டவணை-எச் பிரிவில் க்ரீமில் பயன்படுத்த வேண்டிய 14 ஸ்டெராய்டுகளை வகைப்படுத்தியுள்ளது. இது மருத்துவர் ஆலோசனை இல்லாமல் அழகு க்ரீம்களை வாங்க தடை விதிக்கிறது. இதில் 500க்கும் அதிகமான மருந்துகள் உள்ளன,

அதனால், மகாராஷ்டிராவில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அழகு க்ரீம்களை விற்கத் தடை போடவிருக்கிறார்கள். இந்தத் தடைச் சட்டம் விரைவில் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon