மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

முத்துசாமி வீட்டில் முதல்வர்: 80-களின் நன்றிக்கடன்!

முத்துசாமி வீட்டில் முதல்வர்: 80-களின் நன்றிக்கடன்!

முன்னாள் அமைச்சரும் கொங்கு அதிமுகவில் ஒரு காலத்தில் கோலோச்சியவருமான ஈரோடு முத்துசாமியின் வீட்டுக்கு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்றனர். முத்துசாமியின் மனைவி ஜெயலட்சுமி கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி காலமானதையொட்டி இரங்கல் தெரிவித்து முத்துசாமிக்கு ஆறுதல் தெரிவித்தனர். இது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தையும் கவனிப்பையும் ஏற்படுத்தியது.

ஈரோடு முத்துசாமி எம்.ஜி.ஆர் காலத்திலேயே கொங்கு அதிமுகவில் பவர்ஃபுல்லான நபர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருவரது அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர். கடந்த 2010ஆம் ஆண்டு முத்துசாமி அதிமுகவில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு திமுகவுக்குச் சென்றவர்.

எடப்பாடி அருகே உள்ள நெடுங்குளம்தான் முத்துசாமியின் சொந்த ஊர். நேற்று அங்கே துணை முதல்வர் ஓ.பன்னீரோடு சென்ற எடப்பாடி பழனிசாமி, மறைந்த திருமதி ஜெயலட்சுமியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு... முத்துசாமிக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் கொங்கு மண்டலத்தில் முதல்வரின் இமேஜை உயர்த்தியுள்ளது.

இதுபற்றி நாம் கொங்கு அதிமுகவில் விசாரித்தபோது, இது எடப்பாடி பழனிசாமியின் நன்றிக்கடன் என்றார்கள்.

“1980களில் கட்சியில் அடிமட்ட தொண்டனாகவும், கீழ் நிலை நிர்வாகியாகவும் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஈரோடு முத்துசாமி அப்போது எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர், அமைச்சரும்கூட. எடப்பாடி அருகேதான் முத்துசாமியின் சொந்த ஊரான நெடுங்குளம்.

இந்த நிலையில் அப்போது மிகச் சாதாரண நிலையில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு வழக்கு விவகாரத்தில் வசமாக சிக்கிக்கொண்டார். அதனால் அவரது அரசியல் வாழ்வுக்கும் தனிப்பட்ட வாழ்வுக்குமே நெருக்கடி ஏற்பட்டது. அப்போது முத்துசாமிதான் தனது அமைச்சர் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி பழனிசாமியை அந்த விவகாரத்தில் இருந்து காப்பாற்றினார். இந்த நன்றிக்கடனை என்றைக்கும் மறக்காதவர் எடப்பாடி பழனிசாமி.

முத்துசாமியின் மனைவி இறந்துவிட்டார் என்ற தகவல் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த முதல்வர், உடனடியாக முத்துசாமியைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். பின்னர் தான் நேரில் வருவதாகச் சொல்லியிருக்கிறார். நேற்று மதுரையில் நடந்த அரசு அலுவலகங்கள் கட்டடத் திறப்பு விழாவுக்குப் பிறகு ஓ.பன்னீரையும் அழைத்துக்கொண்டு முத்துசாமி வீட்டுக்குச் செல்லத் திட்டமிட்டார் முதல்வர்” என்றவர்களிடம்...

தனக்கு முதல்வர் பதவி கொடுத்த சசிகலாவின் கணவர் நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதவர், எட்டு வருடங்களுக்கு முன் திமுகவுக்குப் போன முத்துசாமி வீட்டுக்குத் துக்கம் கேட்கச் செல்கிறாரே என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது பற்றிக் கேட்டோம்.

“முத்துசாமியின் மனைவி மறைந்த தகவலைக் கேட்ட முதல்வர் இதுபற்றி துணை முதல்வருடன் பேசினார். ‘நான் முத்துசாமி அண்ணனுக்கு நன்றிக்கடன்பட்டவன். நீங்களும் வாங்க. போயிட்டு வந்துடுவோம்’ என்று அழைத்திருக்கிறார். அதிமுக என்ற கட்சிக்கு வேராக இருந்தவர்களில் முக்கியமானவர் முத்துசாமி. இன்னிக்கு கொங்கு பூமியில் அதிமுக வலுவா இருக்குன்னா அதுக்கு முத்துசாமியும் ஒரு காரணம். நடராஜன் அதிமுகவுலயே இருந்தாலும் அவர் கட்சிக்காகக் களப் பணியாற்றாதவர். ஆனால், முத்துசாமி தொண்டராகப் பணியாற்றி அமைச்சர் வரை உயர்ந்தவர். எனவேதான் முதல்வரும், துணை முதல்வரும் முத்துசாமி வீட்டுக்கு நேராகச் சென்றனர். ஒரே நேரத்தில் அதிமுக தொண்டர்கள், தினகரன், திமுக என மூன்று தரப்புக்கும் மெசேஜ் கொடுத்திருக்கிறார் முதல்வர்” என்று விளக்கம் கொடுத்தனர் கொங்கு அதிமுகவில்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon