மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

திண்டுக்கல்: நாற்று வளர்க்க பசுமைக் குடில்கள்!

திண்டுக்கல்: நாற்று வளர்க்க பசுமைக் குடில்கள்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் உயர் தொழில்நுட்பப் பசுமைக் குடில்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உயர் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி விவசாயிகளுக்குத் தரமான நாற்றுகள் வழங்கும்விதமாகப் பசுமைக் குடில்கள் அமைக்கும் பணி திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இங்கு ஏற்கெனவே காய்கறி சாகுபடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கத்திரிக்காய், தக்காளி, வெள்ளரி மற்றும் குடமிளகாய் போன்ற காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து விவசாயிகளுக்கு இலவசமாக நாற்றுகளும் வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே இஸ்ரேல் நாட்டுத் தொழில்நுட்ப வசதியுடன் அமைக்கப்பட்ட பசுமைக் குடில்கள் செயல்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், தற்போது ரூ.1.7 கோடியில் மூன்று உயர் தொழில்நுட்பப் பசுமைக் குடில்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் குடில்களில் மிகப்பெரிய காற்றாடிகளும் அமைக்கப்படவுள்ளன. இதிலிருந்து செடிகளுக்குத் தண்ணீர் விழும் வகையில் குடில்கள் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து நாற்றுகளை வாடாமல் பார்த்துக்கொள்ளலாம். மேலும், குடில்களுக்குள் தொடர்ச்சியாகக் குளிர்ந்த காற்று வீசுவதற்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. குடில்களுக்குள் பூச்சிகள் எளிதில் செல்ல இயலாது என்பதால், பூச்சி மருந்து தெளிக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது. இதில் ஒரே முறையில் 14 லட்சம் நாற்றுகள் வளர்க்க இயலுமென்றும், இந்த நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுமென்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon