மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

சிறப்பு நேர்காணல்: இப்போதைக்கு நமக்கு ஓய்வு இல்லை!

சிறப்பு நேர்காணல்: இப்போதைக்கு நமக்கு ஓய்வு இல்லை!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் ஓர் உரையாடல் - பகுதி 8

சந்திப்பு: த. நீதிராஜன்

வேலை தேடி மாநிலம் விட்டு மாநிலம் செல்கிற தலித் - பழங்குடி தொழிலாளர்கள், அதே பாதிப்புகளை அடையக் கூடியவர்களாக இருந்தாலும், அவர்கள் போய் வேலை செய்கிற மாநிலத்தில் தலித் - பழங்குடியினருக்கான பட்டியலில் அவர்கள் இல்லை என்பதற்காக அவர்களுக்கு இந்தச் சட்டத்தினால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை.

இடம் பெயர்ந்த தலித்துகள் அந்த மாநிலங்களில் உள்ள தலித்துகளைப் போலவே எல்லா வகையிலும் கருதப்படவேண்டுமா என்பதைப் பொறுத்தவரை அது அரசியல் சாசன சட்டக்கூறுகள் 341 மற்றும் 342-ன் கீழ் வருகிறது. இதிலும் பொருத்தமான தீர்வை அரசு உருவாக்கவேண்டும்.

மறுவாழ்வுக்கும், நட்ட ஈடுக்குமான பிரிவுகள் பலப்படுத்தப்பட வேண்டும். உதாரணமாகப் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தலித் அல்லது பழங்குடி பெண்ணுக்கு உடனடியாக ஒரு நிரந்தரமான வேலை தரப்பட வேண்டும். அது குறைவான படிப்பு, காரணமாகக் கடைநிலை ஊழியர் பணியாகக் கூட இருக்கட்டும். அப்போதுதான் அவர்களுக்குப் பொருளாதாரப் பலம் ஏற்படும். சாதி அடிப்படையிலான ஆணாதிக்கச் சமூகம், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்ளும்போது அதனை எதிர்கொள்ள அப்போதுதான் அவர்களால் இயலும். அத்தகைய ஆதரவு என்பது கேரளத்தில் சூரிய நெல்லி தொடர் பாலியல் பலாத்காரம் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தரப்பட்டது. ஆனால் இது இத்தகைய பாதிக்கப்பட்ட பெண்களின் மீது அக்கறை கொண்ட ஏதோ சில அதிகாரிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏதோ சிலரின் தனிப்பட்ட முயற்சிகளால் தரப்படும் நிவாரணமாக இருக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் கட்டாயம் கிடைக்கக்கூடியதாக, பிரிக்க முடியாத, சட்ட ரீதியான பகுதியாக இருக்க வேண்டும்.

அரசியல் சாசனத் திருத்தம் உள்ளிட்டவை, சாசனத்தில் உள்ள ஏழாவது பட்டியலில் உள்ள மோசமான இடைவெளியை நீக்கும். முழுமையான சமூக நீதிச் செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவும்.

என்னென்ன சட்டத் திருத்தங்கள் 2015இல் செய்யப்பட்டு சட்டம் மேலும் பலப்படுத்தப்பட்டது?

வன்கொடுமைக் குற்றங்களின் பட்டியல் 22இலிருந்து 37 ஆக உயர்த்தப்பட்டது. தலித் மக்களை ஊரை விட்டு ஒதுக்கிவைப்பதும் பொருளாதாரரீதியாக ஒதுக்கிவைப்பதும் இன்றும் பரவலாக நடப்பவை. அவற்றைக் குற்றங்களாக அறிவிக்க வேண்டும் என 1928இல் சைமன் கமிஷனிடம் அம்பேத்கர் கொடுத்த புகார்ப் பட்டியலில் கோரினார். வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989இல் உருவானபோது, அதையும் நான் சேர்க்க முயன்றேன். அப்போது தோற்றேன். 2015இல் வெற்றி பெற்றேன். 87 வருடங்களுக்குப் பிறகு அம்பேத்கர் மேலும் முன்னேறினார்.

தலித் மக்கள், பழங்குடியினரைக் கையால் மலம் அள்ளும் தொழிலாளியாக மாற்றுவதோ பணியமர்த்துவதோ பணியாற்ற அனுமதிப்பதோ வன்கொடுமை எனவும் அறிவிக்கப்பட்டது. மனிதர்கள் மற்றும் விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்தவோ சவக்குழி தோண்டவோ சொல்லி கட்டாயப்படுத்தல், பெண்களுக்கு எதிரான பாலியல் தன்மையிலான குற்றங்கள், அவர்களைத் தேவதாசிகளாக மாற்றுவது போன்றவை, சூனியக்காரி பட்டம் சுமத்துவது தொடர்பான குற்றங்கள், வாக்களிப்பதில், வேட்பாளர் அறிவிப்பதில், வேட்பாளராக நிற்பதில் கட்டாயப்படுத்தல்கள், தேர்தலுக்குப் பின்னால் ஏற்படுகிற வன்முறை தொடர்பான தேர்தல் குற்றங்கள், மேலவளவு கிராமம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டதைப் போன்று தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் கடமையாற்றுவதில் ஏற்படுத்தப்படும் தடைகள், மதிப்புமிக்க தலைவர்களின் சிலைகள் அவமானப்படுத்தப்படுதல், தலித் மக்கள், பழங்குடியினருக்கு எதிரான கெட்ட எண்ணம்,வெறுப்பு, காழ்ப்புணர்ச்சியை உயர்த்திப் பிடித்தல், இடுகாடு, சுடுகாட்டில் சமத்துவம், நீர் ஆதாரங்களில் சமத்துவம் மறுத்தல், பாதையில் நடப்பதையோ, சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஓட்டுவதையோ தடுத்தல், கல்யாண ஊர்வலங்களில் குதிரையில் பவனிவருவது, காலணி, புதுச்சட்டை அணிதல், ஆலயங்களில் சமத்துவமான நுழைவு, கடைகளில் சமத்துவமான நுழைவு, தொழில் நடத்தல், வேலை செய்தல், வணிகம், வசிப்பிடம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட இடங்களில் அவர்களின் சுதந்திரத்தில் தலையிடல் இவை எல்லாம் குறிப்பாக குற்றங்கள் எனத் தெளிவுபடுத்தப்பட்டன.

தனியான சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டது. அதனால்தான் உடுமலைப்பேட்டை ஆணவக்கொலை வழக்கில் சங்கரைக் கொலை செய்ய குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனைகள் பெற்றுத் தர சங்கரின் மனைவி கவுசல்யாவால் முடிந்தது.

இரண்டு மாதங்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். உயர் நீதிமன்ற மேல்முறையீடுகள் மூன்று மாதங்களில் முடிய வேண்டும் என்று புதிய திருத்தங்கள் வலியுறுத்தின. வேகமான விசாரணையும் சரியான தண்டனையும்தான் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும்.

இந்தச் சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து இந்தச் சட்டத்தின் கடுமையைக் குறைத்துவிட்டதே?

இந்தச் சட்டத்தின் கீழ் புகார்கள் பதிவு செய்வதற்கு முன்னால் குற்றம்சாட்டப்பட்டவரின் மேலதிகாரியின் அனுமதி பெறவேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன்ஜாமீன் வழங்கலாம் என்றும் உச்ச நீதிமன்றத்தின் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. 2015இல் மேலும் பலப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் பல மடங்கு பின்னுக்குப் போய்விட்டது.

இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வடஇந்தியாவில் ஏப்ரல் 2 அன்று முழு கடையடைப்பு நடந்துள்ளது. மத்திய அரசும் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனு செய்துள்ளது.

நாடு தழுவிய எதிர்ப்பு உருவாகியிருப்பதால் மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு சரிசெய்யும் என நம்புகிறேன்.

வன்கொடுமைகள் முற்றாக எப்போது ஒழிக்கப்படும்?

வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை மேலும் பலப்படுத்துவது என்பது வன்கொடுமைகளை இல்லாமல் செய்துவிடுகிற முயற்சிதான். அதற்கான திருத்தங்களின் முறையான தொகுப்பு 2009இல் தேசிய ஆலோசனை கவுன்சிலுக்கும் அனுப்பப்பட்டது. தேசியக் கூட்டமைப்பின் பரிந்துரைகளில் பலவற்றைத் தேசிய ஆலோசனை கவுன்சில் ஏற்றுத் தனது பரிந்துரைகளில் சேர்த்துக்கொண்டது. ஆனால் சில விடுபட்டன. விடுபட்டு விட்ட சில முக்கியமான பரிந்துரைகளையும் சேர்த்துக்கொள்ளுமாறு நான் தேசிய ஆலோசனை கவுன்சிலைக் கேட்டுக்கொண்டேன். உதாரணமாகக் கொலையும் ஒரே சமயத்தில் பலர் கொலை செய்யப்படுவதையும் சிறப்பாகப் பிரித்துக் காட்டும் குற்றங்களாகப் பிரிவு 3 (2)ன் கீழ் பொருத்தமான வழக்குகளில் ஆயுள் தண்டனை தவிர மரண தண்டனையும் வழங்க வழி செய்யும் வகையிலான பரிந்துரை ஆகும். மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும் ஒரு நகலைத் தயார் செய்தது, அதிலும் தேசியக் கூட்டமைப்பின் பல பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றிலும் சில முக்கியமான பரிந்துரைகள் விடுபட்டுவிட்டன. அவற்றையும் சேர்த்துக்கொள்ளுமாறு அமைச்சகத்துக்கு நான் எழுதிக் கேட்டுக்கொண்டேன்.

இந்தியாவில் தங்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளைத் தலித்துகளோ, பழங்குடிமக்களோ எல்லாவற்றையும் புகார்களாகப் பதிவு செய்ய முன் வருகிற நிலைமை இன்னும் ஏற்படவில்லை. அப்படி வந்து பதிவு செய்கிற சிலரின் புள்ளி விவரங்களின்படி -

• ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் 4 தலித் மற்றும் ஆதிவாசிகள் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

• ஒவ்வொரு நாளும் 3 தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். 2 தலித்துகள் கொலை செய்யப்படுகிறார்கள் மற்றும் 11 தலித்துகள் அடி உதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

• இந்தியாவில் ஒரு வாரத்துக்கு 13 தலித்துகள் கொலை செய்யப்படுகிறார்கள். 5 தலித் வீடுகள் எரிக்கப்படுகிறது. 6 தலித்துகள் கடத்தப்படுகிறார்கள்.

இத்தகைய வன்கொடுமைகள் முற்றாக ஒழிக்கப்படும் வரை நமக்கு ஓய்வு இருக்க முடியாது. வன்கொடுமைகள் நிகழ்வதைச் சாத்தியமாக்கி, தலித் - பழங்குடி மக்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழ்நிலைகளை அகற்றும் வரை நமக்கு எந்த ஓய்வும் இருக்க முடியாது.

(பி.எஸ்.கிருஷ்ணனை விரிவாக நேர்காணல் செய்து அதைத் தொகுத்து அளித்திருக்கும் த.நீதிராஜன், இதழாளர், சமூகச் செயற்பாட்டாளர். பி.எஸ்.கிருஷ்ணனின் ‘சாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்’ என்னும் நூலைத் தமிழாக்கம் செய்தவர். காயிதேமில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

பாகம் 1-சாதிக்கு ஒரு சட்டம் தேவையா?

பாகம் 2-வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உருவான வரலாறு

பாகம் 3-ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் சாசன உரிமை

பாகம் 4-ஆழமாய்ப் புரையோடிப்போன வெறுப்பு!

பாகம் 5-அரசாங்கங்களும் ஊடகங்களும் தலித் பிரச்சினையை எப்படி அணுகுகின்றன?

பாகம் 6-வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் சமூக விளைவுகள்!

பாகம் 7-தலித்துகளின் கௌரவத்தைக் காக்கும் சட்டம்

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon