மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

இந்தியன் என்பதில் வெட்கப்படுகிறோம்!

இந்தியன் என்பதில் வெட்கப்படுகிறோம்!

காஷ்மீர் சிறுமிக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பலர் தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

காஷ்மீர் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நீதி கேட்டுப் பலரும் தங்களது கண்டனக் குரல்களை முன்வைத்து வருகின்றனர். இந்தச் சம்பவத்துக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்துவரும் நிலையில், திரைப் பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வலிகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை பார்வதி, காஷ்மீர் சிறுமி கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “நான் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண். இதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். காஷ்மீரின் கத்துவா பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி கோயிலில் பல நாள்களாக வைத்து வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளார். அவளுக்கு நீதி கிடைக்க வேண்டும்'” என்று தன் வேதனையைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதே போல் நடிகை கரீனா கபூர், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும், “நான் இந்தியன் என்பதில் வெட்கப்படுகிறேன்” என்று பதிவிட்டு காஷ்மீர் சிறுமிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். நம் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. திரைப்படத் துறை மட்டுமல்லாமல் எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு எதிரான அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபர்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்காததே தொடர் சம்பவங்களுக்குக் காரணம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திரைப் பிரபலங்கள் என்பதையும் தாண்டி நான் இந்தியனாக இருப்பதில் வெட்கப்படுகிறேன் என்று இவர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon