மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

சிறப்புக் கட்டுரை: முசாகர்களின் மாற்றத்துக்குப் போராடும் பெண்!

சிறப்புக் கட்டுரை: முசாகர்களின் மாற்றத்துக்குப் போராடும் பெண்!

சைதா ஃபரிதா

கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து பீகாருக்குத் தனது இளம் வயதில் குடிபெயர்ந்தவர் சுதா வர்கீஸ். இப்போது அவர் அங்கு சென்று முப்பதாண்டுகள் கடந்துவிட்டது. இவருடைய செயல்பாடுகள் மகாதலித் பிரிவைச் சேர்ந்த முசாகர் இன மக்களுக்குப் பெரிதும் பயன்பட்டுள்ளது. (மகாதலித் என்பது பீகாரில் வசிக்கும் தலித் பிரிவு மக்களைக் குறிக்கும் வார்த்தையாகும்). பீகாரைப் பொறுத்தவரையில் முசாகர் சாதி ரீதியாக ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு பிரிவினராவர். பொதுவாகவே எலிக்கறி உண்பவர்களாகவே இவர்களை அடையாளப்படுத்துவர். ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாகவே இவர்கள் குடியிருப்பர். அங்குள்ள உயர் சாதியினரால் இவர்கள்மீது பலவிதமான வன்முறைகள் நிகழ்த்தப்படுவதும் தொடர்கிறது.

மதிய வேளையில் சுதாவைச் சந்தித்துப் பேசினோம். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை இவர் பெற்றுள்ளார். இவர் ‘நாரி குஞ்சன்’ என்ற தொண்டு நிறுவனத்தை இயக்கி வருகிறார். இந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலம் பள்ளிக்கூடத்தையும் இவர் இயக்கி வருகிறார். “முசாகர் சமூக மக்களுக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கை தேவை. அவர்களின் உரிமைகளுக்காகவும் ஒரு சிறப்பான வாழ்க்கையை அவர்கள் பெறவும் நான் போராடி வருகிறேன்” என்கிறார் சுதா.

“எனக்குச் சாதி அமைப்பு முறை குறித்து தொடக்கத்தில் தெரியாது. சாதி ரீதியாக நிலவும் பாரபட்சம் பற்றியோ, தீண்டாமைக் கொடுமைகள் பற்றியோ தெரியாது. இங்கு வந்து முசாகர்களைப் பார்த்த பின்னர்தான் இதன் கொடுமை புரிந்தது. இவர்களை எலிக்கறி உண்ணும் சமூகமாகவே இங்கு பார்க்கும் அவலம் நிலவுகிறது” என்கிறார் சுதா.

“தொடக்கத்தில் எனக்குத் தடுமாற்றமாக இருந்தது. பீகாருக்கு வரும்போது ஓரளவுக்கு ஆங்கிலம் தெரியும். இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தி என இரண்டையும் நன்றாகப் பேசப் பழகிக் கொண்டேன்” என்கிறார் சுதா. இங்கு வந்த பிறகு பட்டப்படிப்பும் வழக்குரைஞருக்கும் படித்துள்ளார். இதனால் முசாகர்களுக்கான வளமான சமூகத்தை உருவாக்கச் சட்ட ரீதியான தடைகளை எளிதாக எதிர்கொள்கிறார்.

நாரி குஞ்சன் தொண்டு நிறுவனத்தைச் சுதா 1987ஆம் ஆண்டு தொடங்கினார். இது லாப நோக்கமற்ற நிறுவனமாகவே இயங்கி வருகிறது. தலித் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கான விழிப்புணர்வையும் இந்த அமைப்பு அளித்து வருகிறது. 2005ஆம் ஆண்டில் இந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலம் பிரேர்னா என்ற பள்ளியையும் இயக்கி வருகிறார். இந்தப் பள்ளி பாட்னாவின், தனபூரில் இயங்கி வருகிறது.

முசாகர் சமூகப் பெண் குழந்தைகள் தோட்ட வேலைகளில்தான் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 2006ஆம் ஆண்டில் பிரேர்னா பள்ளி தொடங்கப்பட்ட பிறகுதான் இவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக நிதிஷ்குமார் பீகார் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் பிரேர்னா பள்ளியின் மற்றொரு கிளை கயாவில் தொடங்கப்பட்டுள்ளது. இப்போது இந்தப் பள்ளிகளில் 3,000 பேர் வரை படிக்கின்றனர். இவர்கள் இப்போதுதான் முதல் தலைமுறையாகப் படிக்கின்றனர்.

சிலர் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளனர். இவர்களுக்குச் செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவம் போன்ற படிப்புகளும் கற்றுத் தரப்படுகிறது. இதற்கான பயிற்சி நிறுவனங்களையும் அமைத்துள்ளனர். மேலும் ஓவியம், நடனம் போன்ற சில துறைகளிலும் மாணவிகளுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த மாணவிகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளும் கற்றுத் தரப்படுகிறது. இதற்காகத் தனியாக கராத்தே ஆசிரியரும் பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கராத்தே பயிற்சி ஆரோக்கியமான மாற்றத்தை அளித்துள்ளது. 2011ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த போட்டி மற்றும் ஜப்பான் மார்ஷியல் கலைகள் தொடர்பான போட்டிகளில் பங்கேற்று இந்த மாணவிகள் 5 தங்கம், 5 வெள்ளி, 14 வெண்கலம் வென்றுள்ளனர்.

“தனிப்பட்ட சில விளையாட்டுகளையும் எங்களது தொண்டு நிறுவனம் ஊக்குவித்து வருகிறது. கிராமப்புற மாணவர்களைச் சூதாட்டங்களிலிருந்து திசை திருப்பும் விதமாக கிரிக்கெட் போட்டிகளுக்கு வங்கிகள் மூலமாக உதவி செய்து வருகிறோம். இப்போது இந்தக் கிராமங்களில் 16 கிரிக்கெட் அணிகள் இயங்கி வருகின்றன. சில அணிகள் பரிசுகளும் வென்றுள்ளன. இதுவும் இங்கு நடந்துள்ள பெரிய மாற்றம்” என்கிறார் சுதா.

இப்போது நாரி குஞ்சன் தொண்டு நிறுவனம் பீகார் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் 850 சுயஉதவிக் குழுக்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகள் பல்வேறு வெற்றிகரமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. இதில் ஆனந்த் சிக்ஷா கேந்த்ரா, அங்கன்வாடிகள், கிஷோரி சிக்ஷா கேந்த்ரா உள்ளிட்ட திட்டங்களும் அடங்கும். இது பள்ளி இடை நின்றவர்களுக்கானத் திட்டமாகும். அதேபோல முதியோர் கல்வித் திட்டமாக அக்ஷராஞ்சலி செயல்படுத்தப்படுகிறது.

பெண்களின் வாழ்வாதாரத்துக்கான சில திட்டங்களையும் சுதா செயல்படுத்தி வருகிறார். “முசாகர் சமூகத்தினருக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை ஊட்டச்சத்துக் குறைபாடு. ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி இந்தப் பெண்களை ஊக்குவித்து வருகிறோம். மேலும், 750 குடும்பங்களில் வீட்டுத் தோட்டம் அமைக்கப்பட்டு காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள பெண்கள் ‘சனே கா சத்து’ என்ற சத்து மாவு தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இது இந்தப் பெண்கள் சுண்டலைக்கொண்டு பாரம்பரியமாகத் தயார் செய்யும் ஒருவகைச் சத்து மாவாகும்” என்கிறார் சுதா.

ஒருங்கிணைந்த வாழ்வுத் திட்டமாகவே சுதா இந்தத் தொண்டு நிறுவனத்தை இயக்கி வருகிறார். மகிளா பேண்ட் குழுமம் உருவாக்கப்பட்டு, அதில் முசாகர் பெண்கள் ஈடுபட்டுச் சிறப்பாக இசைத்து வருகின்றனர். “ஆண்கள் மட்டும்தான் பேண்ட் வாசிக்க வேண்டுமென்ற பழைமையை உடைக்கவே பெண்களை பேண்ட் இசைக்க வைத்தோம். பெண்களுக்கு முறையாக பயிற்சியளித்தோம். நான் எதிர்பார்த்ததை விட மிக விரைவில் இந்தப் பெண்கள் இசைக்கக் கற்றுக்கொண்டனர். முதலமைச்சர் முன்னால் ஒரு மேம்பாட்டுத் திட்டத்தில் இவர்கள் இசைத்துள்ளனர். பிபிசியில் இவர்களைப் பற்றிய செய்தி வெளியானது. இந்தக் குழுவின் இசையைக் கேட்ட ஒருவர் தன்னுடைய திருமணத்தில் வாசிக்க அழைத்தார். இப்போது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இசைத்து வருகின்றனர்” என்று பெருமிதமாகச் சொல்கிறார் சுதா.

மலிவான விலையில் முசாகர் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்காக நாப்கின் உற்பத்தி நிறுவனம் ஒன்றையும் நாரி குஞ்சன் தொண்டு நிறுவனம் இயக்கி வருகிறது. “முசாகர் பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாம்பல் மற்றும் மணல் போன்ற சுகாதாரமற்ற பொருள்களைப் பயன்படுத்தி வந்தனர். இதனால் இவர்களுக்கு மலிவான விலையில் சுகாதாரமான நாப்கின்களைத் தயாரித்து வழங்கி வருகிறோம்” என்று சுதா கூறுகிறார்.

இவருக்குச் சைக்கிள் பயணம் என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். முசாகர் மக்களின் வாழ்க்கை நிலையை மாற்ற இவர் எடுத்த முயற்சிகளுக்குப் பல்வேறு விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்துள்ளன. இவருக்குக் கிடைத்துள்ள பத்மஸ்ரீ விருது என்பது நாட்டின் நான்காவது பெரிய குடிமகனுக்கான விருதாகும். 2017ஆம் ஆண்டில் ‘வனிதா உமன் ஆஃப் தி இயர்’ விருதையும் இவர் பெற்றுள்ளார். இந்த விருது மலையாள மனோரமா குழுமத்தால் வழங்கப்பட்டது.

சுதா வர்கீஸ் அயராது முசாகர்களுக்காக உழைத்து வருகிறார். தொடர்ந்து முசாகர்கள் மீதான வன்முறைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், அவர்களுக்கான நீதி போன்றவற்றுக்காகவும் தொடர்ச்சியாக சுதா போராடி வருகிறார். தங்கள் உரிமைகள் குறித்து முசாகர்கள் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர். “மாற்றத்தை முசாகர்கள் அடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக நான் நீண்ட காலம் தொடர்ந்து உழைப்பேன்” என்று உறுதியுடன் கூறுகிறார் சுதா.

நன்றி: தி பெட்டர் இந்தியா

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon