மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

சிறப்புக் கட்டுரை: போராட்டம் இல்லாத உலகம்?

சிறப்புக் கட்டுரை: போராட்டம் இல்லாத உலகம்?

அ.குமரேசன்

போராட்டம் இல்லாமல்

யாராட்டமும் செல்லாது

ஒன்றுபடுவோம் போராடுவோம்

போராடுவோம் வெற்றி பெறுவோம்

வெற்றி கிட்டும்வரை

போராடுவோம்

- அண்மையில் சென்னையில் ஒரு மையமான இடத்தில் கூடியிருந்தவர்களிடமிருந்து எழுந்த முழக்கங்கள் இவை. அவர்கள் மாற்றுத்திறனாளிகள். உடலின் ஏதோவோர் அங்கத்தின் செயலிழப்பால் அல்லது வளர்ச்சிக் குறைவால் பிற அங்கங்களின் செயல்திறனைச் சார்ந்து வாழ்கிறவர்கள். கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிட முன்வந்தவர்களின் வேட்புமனு ஏற்கப்படாததை எதிர்த்து நடந்த அந்தப் போராட்டம், உயரதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து வெற்றிகரமாக முடிவடைந்தது.

உடலின் எந்த அங்கம் ஊனமுற்றிருக்கிறதோ அதுவே அடையாளமாக அழைக்கப்பட்ட அவமானகரமான நாள்களைத் தாண்டி வந்ததையும், பின்னர் ‘ஊனமுற்றோர்’ என்ற அடையாளச் சொல் வந்ததையும், அதன் பின் ‘இயலாதார்’ என்று குறிப்பிடப்பட்டதையும், அதையும் கடந்து தற்போதைய மாற்றுத்திறனாளிகள் என்ற பொருள்தரும் சொல் உலக அளவில் எல்லா மொழிகளிலும் புழக்கத்துக்கு வந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிற அவர்கள், இதற்கே நெடியதொரு போராட்டம் தேவைப்பட்டதையும் நினைவுகூர்கிறார்கள்.

போராட்டங்களைத் தவிர்க்க முடியுமா?

போராட்டச் செய்திகள் வராத நாள்களே இல்லை. தமிழகத்தில், இந்தியாவில் என்றில்லை, அனைத்து நாடுகளிலும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. உலக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் போராட்டங்களால்தான் நிரம்பியிருக்கின்றன. எழுதப்படாமலே கடந்துபோன தொன்மை நாள்களும் போராட்ட வரலாறுகளைப் பேசக்கூடியவைதான்.

தமிழகத்தில் இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை வாரியப் போராட்டம் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறதோ, இல்லையோ... நாட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டம், மறியல், நுழைவாயில் மூடல் உள்ளிட்ட போராட்டங்களும் காவல் துறை தடியடியும் உலகம் முழுக்கச் செய்தியாகி, எதற்காக இதெல்லாம் என்று கேட்கச் செய்திருக்கின்றன. ஐபிஎல் போட்டியை நடத்துவது அரசாங்கம் அல்ல, மைதானத்தின் முழுமையான கொள்திறனையும் நிரப்புகிற அளவுக்கு ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கிவிட்டார்கள், இந்த நிலையில் அதை நிறுத்துவதோ வேறு மாநிலத்துக்கு மாற்றுவதோ சாத்தியமா என்று கேட்கிறார்கள். போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அது நன்றாகவே தெரியும். அவர்களது ஒரு நோக்கம் மத்திய ஆட்சி பீடத்தினருக்குத் தமிழகத்தின் ஆவேசத்தை உணர்த்துவது. இரண்டாவது நோக்கம் நாட்டு மக்களின்/உலக மக்களின் கவனத்தைக் கோருவது. மூன்றாவது நோக்கம் கிரிக்கெட் ரசிகர்களின் மனசாட்சியைக் கொஞ்சமாவது சீண்டுவது.

காவிரி நீர் உரிமைப் பங்கீட்டுக்காக இதற்கு முன்பாகவும் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்துள்ளன என்றபோதிலும், முன்னெப்போதையும்விடப் பெரியதொரு பரிணாமத்தை இப்போது எடுத்துள்ளன. அதற்கு ஒரு முக்கியக் காரணம், மத்திய ஆளுங்கட்சி வெளிப்படையாக எதிர்க்க முடியாதிருக்கிற கோரிக்கைக்காக, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் போராட்டக் களத்தில் இறங்கியிருப்பது. மற்றொரு முக்கியக் காரணம், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இவ்வளவு திட்டவட்டமாக வந்திருப்பதைத் தமிழக மக்கள் பார்ப்பது. ஆகவேதான் முந்தைய ஆட்சியாளர்களும் அதில் கூட்டு வகித்தவர்களும் முன்பு என்ன செய்தார்கள் என்று மத்திய ஆளுங்கட்சியின் மாநிலத் தலைவர்கள் வாதிடுவது எடுபடவில்லை.

போராட்ட வடிவங்கள் குறித்த கேள்விகளுக்கும் பதில் கிடைத்து வருகிறது. சட்டப்பூர்வ அனுமதி பெற்று நடைபெறும் சம்பிரதாயப் போராட்டங்கள் தொடர்கின்றன என்றபோதிலும் புதிய வடிவங்களை மக்கள் கவனிக்கிறார்கள். நெடுஞ்சாலைகளின் டோல்கேட் முற்றுகையும் சேப்பாக்கத்தின் ஸ்டேடியம் கேட் மூடலும் நிச்சயமாகப் புத்துணர்வூட்டுகின்றன. ஏற்கெனவே ஜல்லிக்கட்டுப் போராட்டம் எப்படி லட்சக்கணக்கான இளைஞர்களைத் திரட்ட முடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வடமாநிலங்களில் தலித் மக்களின் போராட்டங்கள், குஜராத்தின் உனா எழுச்சியின் பின்தொடரலாகக் கூர்மை பெற்றுவருகின்றன. எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிரான அந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாறிவிட்டன என்று தேசிய ஊடகங்கள் பலவும் சித்திரித்தபோதிலும், நாடு தழுவிய விவாதங்களை ஏற்படுத்தியதோடு, ஏன் பிற மாநிலங்களில் அப்படிப்பட்ட போராட்டங்கள் தொடங்கவில்லை என்ற கேள்விக்கும் இட்டுச் செல்கின்றன.

மகாராஷ்டிரா மாநிலத் தலைநகரில் விவசாயிகள் மாபெரும் பேரணி வடிவில் நடத்திய போராட்டம் அனைத்து மாநிலங்களிலும் இதுபோல் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொழிலாளர்கள் உட்பட பொதுமக்களின் ஆதரவோடும் நடந்தது அதன் முக்கிய வெற்றி. கோரிக்கைகளை அரசு ஏற்கவைத்த அந்தப் போராட்டம் நாடெங்கும் நம்பிக்கையையும் விதைத்திருக்கிறது.

இதேபோல் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் தொடங்கப்பட வேண்டிய ஒரு போராட்டம்தான், கேரளத்தில் 16 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஒருநாள் வேலைநிறுத்தம். கார்ப்பரேட் நிர்வாகங்கள் தொழிலாளிகளை வெளியேற்றத் தோதாக, தொழிலாளர் சட்டத்தில் மத்திய அரசு ஓசைப்படாமல் செய்த திருத்தத்தை எதிர்த்து நடந்த போராட்டம் அது. எங்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கவும், வெளியார் வேலை ஒப்படைப்புக்கான செயல்முறை அயலாக்கம் (Outsourcing) ஏற்பாட்டுக்கும் வழிசெய்யும் ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்தல் மற்றும் ஒழித்தல் சட்டத் திருத்தத்தையும் செய்துவிட்டு, இன்னொரு பக்கம் 300 நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மேல் போனால்தான் தொழிற்சங்கம் தொடங்க முடியும் என்றும் விதியையும் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. அதற்கு எதிரான போராட்டங்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்கமும் கலந்துகொள்கிறது.

ஆந்திர மாநிலத்தில் ஆளுங்கட்சியே போராட்டக்களத்தில் இறங்கியிருக்கிறது. மத்திய ஆளும் கூட்டணியிலிருந்து விலகியது, முதலமைச்சர் சைக்கிள் பயணம் நடத்தியது போன்றவற்றில் தேர்தல் கணக்குகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், கூட்டணியில் சேர்ந்தபோது அளித்த, சிறப்பு நிதி ஒதுக்கீட்டிற்கான மாநிலத் தகுதி அறிவிக்கப்படும் என்ற வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்ற மறுப்பதை எதிர்த்தே இந்த நிகழ்ச்சிப் போக்குகள்.

இப்படியான பொருளாதாரக் கோரிக்கைகளோடு இணைந்த பெரிய போராட்டங்கள் மட்டுமல்ல; சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள், பாலினப் பாகுபாட்டுக்கு எதிரான பெண்கள் போராட்டங்கள், பாலின அடையாள மரியாதைக்கான மாறுபாலினத்தவர் போராட்டங்கள், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைகளுக்கு எதிரான போராட்டங்கள், வழிபாட்டு உரிமைகளுக்கான போராட்டங்கள், சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்டங்கள், மதவெறி சார்ந்த ஒற்றைப் பண்பாட்டு ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்கள், பன்மொழி உரிமையை மறுக்கும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், எல்லோருக்கும் சமமான தரமான கல்வி என்ற இலக்கை நோக்கிய பொதுப் பள்ளிக்கான போராட்டங்கள், இத்தகைய சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்கான கருத்துரிமைப் போராட்டங்கள், வனப் பாதுகாப்புச் சட்டத்தின் பெயரால் வெளியேற்றப்படுவதையும் பாரம்பரிய வாழ்வாதாரமாகிய வனப் பொருள் உரிமைகள் பறிக்கப்படுவதையும் எதிர்த்துக் காடுகளின் இயற்கையான பாதுகாவலர்களாகிய பழங்குடி மக்கள் நடத்துகிற போராட்டங்கள், தங்களுடைய வாழ்க்கையும் இயற்கையானதுதான் என்று சமுதாயம் புரிந்துகொள்ளச் செய்வதற்காக தற்பாலின ஈர்ப்பாளர்கள் நடத்துகிற போராட்டங்கள் எனப் போராட்டங்கள் முடிவற்று நீள்கின்றன.

பத்திரிகைகளின் சர்வதேசப் பக்கங்களுக்கு வந்தால், தொலைக்காட்சிகளின் உலகச் செய்திகள் தொகுப்பைத் திருப்பினால் போராட்டங்களே தலைப்பாகியிருக்கின்றன. டொனால்டு ட்ரம்ப் அதிரடிகளை எதிர்த்து அமெரிக்க மக்கள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரையில் போராட்டக் காட்சிகளைக் காண முடிகிறது. காலண்டர் தாள்கள் கிழிபடக் கிழிபடப் புதுப்புதுப் போராட்டங்களுடனேயே இன்றைய நாள் விடிகிறது. போராட்டங்களால்தான் விடிகிறது.

இந்தப் போராட்டங்களுக்குப் பொதுமுகம் ஒன்று இருக்கிறதா? போராட்டங்களால் உண்மையிலேயே ஏதேனும் பலன் ஏற்படுகிறதா? போராட்டங்கள் இல்லாத உலகம் சாத்தியமில்லையா?

(நாளையும் அலசுவோம்...)

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected]).

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon