மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்?

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்?

கர்நாடக தேர்தலுக்கு பிறகு மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சரவை கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் மாற்றி அமைக்கப்பட்டது. நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை, பியூஷ் கோயலுக்கு ரயில்வே துறை போன்றவை வழங்கப்பட்டன. 13 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தற்போது, மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனை பாஜக வட்டாரத்தில் தொடங்கியுள்ளது.

மத்திய நிதியமைச்சராக உள்ள அருண் ஜெட்லியின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது, ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்து வருவதால் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அசோக் கஜபதி ராஜு மற்றும் சௌத்ரி ஆகியோர் தங்களின் மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தது போன்றவை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கரில் இருந்து 10 எம்பிக்கள் மக்களவைக்கும் 5 எம்பிக்கள் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால்,விஷ்ணு தியோ சாய் ஒருவருக்கும் மட்டுமே மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் இருந்து 25 எம்பிக்கள் மக்களவைக்கும் 10 எம்பிக்கள் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் மத்திய அமைச்சரவையில் பங்கெடுத்துள்ளனர். விஜய் கோயல் மற்றும் கேஜே அல்போன்ஸ் ஆகிய இருவரும் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, கர்நாடக தேர்தலுக்கு பின்னர், மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ள பாஜக அரசு, மேற்குறிப்பிட்ட 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

தற்போது பிரதமரையும் சேர்த்து 74 பேர் அமைச்சரவையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை 81ஆக உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஞாயிறு, 15 ஏப் 2018

அடுத்ததுchevronRight icon