மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

தொகாடியா உண்ணாவிரதம்!

தொகாடியா உண்ணாவிரதம்!

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வி.எஸ்.கோக்ஜே வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் தேர்தல் முடிவையடுத்து, வரும் 17ஆம் தேதியன்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார் பிரவீன் தொகாடியா.

விஹெச்பி என்று சொல்லப்படும் விஷ்வ ஹிந்து பரிஷத், இந்துத்துவா கொள்கையைப் பரப்பும் வலதுசாரி அமைப்பாகும். இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்பட பல நாடுகளில் இது இயங்கி வருகிறது. இதன் சர்வதேசத் தலைவராக பிரவீன் தொகாடியா இருந்துவந்தார். கடந்த ஆண்டு, இவருக்குப் பிறகு புதிய தலைவரை ஒருமனதாகத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தோல்வியுற்றது.

இதனால், விஹெச்பியின் 52 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக நேற்று (ஏப்ரல் 14) தேர்தல் நடத்தப்பட்டது. குர்கானில் நடந்த தேர்தலில், முன்னாள் நீதிபதி விஷ்ணு சதாசிவ் கோக்ஜே மற்றும் ராகவ ரெட்டி இருவரும் சர்வதேசத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டனர்.

நெடுங்காலமாக விஹெச்பி தலைவராக இருந்துவந்த பிரவீன் தொகாடியா சார்பில் நிறுத்தப்பட்டவர் ராகவ ரெட்டி. விஹெச்பி சார்ந்த 192 பிரதிநிதிகள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். இதன்பிறகு, வாக்கு எண்ணும் பணி நடந்தது. இதன் முடிவில், கோக்ஜே 131 வாக்குகளும், ராகவ ரெட்டி 60 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரு வாக்கு செல்லாமல் போனதாக மதிப்பிடப்பட்டது.

முடிவு அறிவிக்கப்பட்டவுடனேயே புதிய செயல் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரை அறிவித்தார் கோக்ஜே. ஆனால், இதில் தொகாடியாவுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை.

தேர்தல் முடிவுக்குப் பிறகு, இனிமேலும் தொடர்ந்து இந்து சமுதாயத்துக்காகப் போராடவுள்ளதாகத் தெரிவித்தார் பிரவீன் தொகாடியா. அதோடு, வரும் 17ஆம் தேதியன்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் கூறினார். ராமர் கோயில் கட்டுவது மற்றும் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதை வலியுறுத்தி, அவர் உண்ணாவிரதம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் குறித்துப் பேசிய தொகாடியா, அதிகாரத்துக்கு முன்னால் விஹெச்பி பணிந்துபோவதாகவும், சில தனிநபர்களின் மோசமான அரசியலால் இது நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தான் போலீஸார் ஒரு வழக்கு தொடர்பாக இவரைக் கைது செய்யச் சென்றபோது, பிரதமர் மோடி மீது தொகாடியா குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஹெச்பியின் புதிய தலைவரான கோக்ஜே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றியவர். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், இவர் இமாச்சல் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது மக்களவை சபாநாயகராக இருந்துவரும் சுமித்ரா மகாஜன், இவரை உடன்பிறவா சகோதரராகப் பாவித்து வருகிறார்.

கோக்ஜேவின் வரவினால், பல ஆண்டுகளாக விஹெச்பியில் கோலோச்சிவந்த தொகாடியாவின் செல்வாக்கு முடிவுக்கு வந்துள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon