மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

சமந்தாவின் புதிய கெட்டப்!

சமந்தாவின் புதிய கெட்டப்!

திருமணத்திற்குப் பின்னரும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் சமந்தா ராம் சரணுடன் நடித்த ரங்கஸ்தலம் படத்தின் வெற்றி விழாவில் வித்தியாசமான கெட்டப்பில் கலந்து கொண்டார்.

ராம் சரண், சமந்தா நடிப்பில் வெளிவந்திருக்கும் ரங்கஸ்தலம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் ராம் சரண், சமந்தா மற்றும் ஆதியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. முழுக்க கிராமத்து பெண்ணாகத் திரையில் தோன்றியிருக்கும் சமந்தாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. சுகுமார் இயக்கி இருந்த இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி, போஜ்புரி மொழிகளில் டப் செய்து வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் சமந்தா, ராம் சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எப்போதுமே திரை நட்சத்திரங்களுக்கென தனி ரசிகர் கூட்டம் இருந்தாலும் அவர்களது உடைகளுக்காகவும், அழகுபடுத்திக்கொள்ளும் முறைகளுக்காகவுமே அவர்களைத் தொடர்ந்து கவனிப்பவர்கள் அதிகம். அதனால் நடிகர் நடிகைகள் ஆடை,அலங்காரத்தில் எப்போதுமே கூடுதல் கவனம் செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த விழாவுக்கு வித்தியாசமான கெட்டப்பில் வந்ததிருந்த சமந்தாவை ஆச்சரியத்துடன் பார்க்காதவர்களே இருந்திருக்க முடியாது என சொல்லலாம்.

நீல நிற காட்டன் சேலை, அதற்குப் பொருத்தமான ஸ்லீவ்லெஸ் பிளவுஸுடன் கூடிய ஆடையில் இவ்விழாவில் கலந்துகொண்டார் சமந்தா. காதில் வெள்ளை நிற கற்கள் பதித்த காதணியை தவிர எந்த ஆபரணமும் அணியாமல் எளிமையாக, அதே சமயம் தனித்துவமாகவும் காட்சியளித்தார். அவரது அழகை இன்னும் மெருகேற்றும் விதத்தில் தலைமுடியை ஸ்டைலாக குறைத்து வெட்டியிருந்தார். இதையடுத்து விழாவில் பேசிய சமந்தா, "படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நன்றி. படத்துக்காக அனைவரும் கடுமையான உழைப்பை வழங்கினோம். இந்தப் படத்தில் ராமலட்சுமி என்ற கேரக்டரில் நடித்தேன். அந்த கேரக்டரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். ராம் சரண் சிறந்த நடிகர். அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி" என்று கூறினார்.

இந்த விழாவில் பேசிய ராம் சரண் சமந்தாவை புகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அவரது டெடிகேஷனையும் உறுதியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றார். அப்போது கீழே நாற்காலியில் அமர்ந்திருந்த சமந்தா தனக்கே உரித்தான புன்னகையோடு தலைக்கு மேல் கை கூப்பி நன்றி சொன்னதும் அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.

தற்போது சமந்தா 'யு டர்ன்' ரீமேக்கில் தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். பவன் குமார் இயக்கும் இந்தப் படத்தில் ஆதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சமந்தா பத்திரிகையாளராக நடிக்கிறார். பூமிகா, நரேன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon