மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ஜெ.மரணம்: தொடரும் முரண்பாடுகள்!

ஜெ.மரணம்: தொடரும் முரண்பாடுகள்!

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் உடன் இருந்ததாக முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன ராவ் கூறியுள்ள தகவல்கள் பொய்யானது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, படுக்கையில் இருந்தவாறு, 2016 செப்டம்பர் 27ம் தேதி மருத்துவமனையில் 2 மணி நேரம் எங்களிடம் ஆலோசனை நடத்தினார் . 2016ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று(ஏப்ரல் 15) செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது நான் உள்ளிட்ட அமைச்சர்கள் ராசிபுரத்தில் உள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற யாக நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தோம். அமைச்சர் வேலுமணி திருவனந்தபுரத்திலும் இருந்தார். ஆனால், நானும் அமைச்சர் வேலுமணியும் இருந்ததாக ராம மோகன ராவ் கூறியுள்ளார்.

தலைமை செயலாளராக இருந்தவர் இவ்வாறு கூறுவது தவறானது. சில தினங்களுக்கு முன் தஞ்சாவூருக்கு சென்ற ராம மோகன ராவ், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக தற்போது பொய்யான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக தான் கேட்டதாகவும் அமைச்சர்கள் பதில் சொல்லவில்லை என்றும் ராம மோகன ராவ் கூறியுள்ளார். யாரையோ திருப்திப்படுத்துவதற்காக அவர் இப்படி சொல்கிறார். ஜெயலலிதா மரணமடைந்தபோது அவர்தான் தலைமை செயலாளராக இருந்தார். இந்தத் தகவல்களையெல்லாம் அப்போதே கூறியிருக்கலாம். ஒன்றரை ஆண்டுகள் கழித்து ஏன் தற்போது கூறவேண்டும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ராம மோகன ராவ் கருத்து தொடர்பாக சில தினங்களுக்கு முன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும் போது , “ஜெயலலிதா இறந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. இதுவரை வாயை மூடிக்கொண்டு மௌனமாக இருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிப்பதுகுறித்துப் பேசியிருக்கிறார். இவ்வளவு நாள்களாக இவர் என்ன செய்துகொண்டிருந்தார். சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்துச்செல்வதுகுறித்து யாரிடம் ஆலோசனை செய்தார்கள்? வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிப்பதற்குத் தடை விதித்தது யார்? அதன் பின்னணி என்ன? யாரைக் காப்பாற்ற ராம மோகன ராவ் அப்பட்டமான இந்தப் பொய்யைக் கூறுகிறார்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளரும் அமைச்சரும் வெவ்வேறு கருத்துகளை கூறிவருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon