மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ஸ்கீம்: மத்திய அரசு டிக்சனரியை பார்க்கட்டும்!

ஸ்கீம்: மத்திய அரசு டிக்சனரியை பார்க்கட்டும்!

ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், டிக்சனரியை பார்த்து மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று(ஏப்ரல் 15) நடைபெற்ற அதிமுக தண்ணீர்ப் பந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “காவிரி வாரியம் அமைக்கும் போராட்டத்தில் அதிமுக தனித்து செயல்படவில்லை. ஒற்றுமையுடன் செயல்படும் நோக்கில்தான் அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. வாஜ்பாய் அரசு மத்தியில் இருந்தபோது, நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட அனுமதிக்கவில்லை என்றால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று அறிவித்து, அதன்படி வாபஸ் பெற்றவர் ஜெயலலிதா. காவிரிக்காக என்றென்றும் உரிமையைக் காக்கும் இயக்கம் அதிமுகதான்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத்தின் முடிவைத் தான், உச்சநீதிமன்றம் மத்திய அரசைச் செயல்படுத்த கூறியிருக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கும். ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், டிக்சனரியை பார்த்து மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும். ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், மெரினாவில் அறவழியில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து அரசு ஆலோசித்து முடிவெடுக்கும் என்று குறிப்பிட்ட ஜெயக்குமார், “தேர்தலைக் கண்டு அஞ்சி நடுங்கி ஓடுகின்ற இயக்கம் அதிமுக கிடையாது. உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி. தேர்தலின் போது அதிமுகவிற்கு மக்கள் அங்கீகாரம் வழங்குவார்கள்.

காவிரிக்கு எதிரான துரோகங்களை மறைக்கவே திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நடைப்பயணம், போராட்டங்களை நடத்துகிறார். வரலாற்றை அவர் திரும்பி பார்க்கட்டும். ஸ்டாலினின் காவிரி உரிமை மீட்பு பயணம் தோல்வியடைந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon