மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ரெய்னா இல்லாத சிஎஸ்கே!

ரெய்னா இல்லாத சிஎஸ்கே!

ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ரெய்னா பங்கேற்காதது அந்த அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் டி20 தொடரில் 11ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பையை அதன் சொந்த மைதானத்தில் வெற்றிகண்டது. இரண்டாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. 203 என்ற இமாலய இலக்கைக் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் சென்னை அணி எட்டி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ரெய்னா பேட்டிங் செய்யும்போது காயம் அடைந்தார். இதனால் இன்று இரவு எட்டு மணிக்கு பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் அவர் களம் இறங்கமாட்டார் என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெம்மிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “ரெய்னா இந்தப் போட்டியில் விளையாடமாட்டார். அடுத்த போட்டிக்கு இடையே நான்கு நாள்கள் இடைவெளி இருப்பதால் அதற்குள் அவர் உடல்நலம் தேறிவிடுவார் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் ரெய்னா. கடந்த 8 சீசன்களில் ஒருபோட்டியில் கூட ரெய்னா இடம்பெறாமல் போனதில்லை. தற்போது ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்முறையாக ரெய்னா இடம்பெறவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இடம்பிடித்திருந்தார். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டில் விளையாடும்போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பேட் கம்மின்ஸ் ஓய்வு எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியது. இதனால் பேட் கம்மின்ஸ் மும்பை அணியில் இடம்பெறவில்லை. தற்போது அவருக்குப் பதிலாக நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே இடம்பிடித்துள்ளார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon