மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

ராகுலின் புதிய திட்டம்!

ராகுலின் புதிய திட்டம்!

அரசியல் சாசனத்தைக் காப்போம் என்ற பெயரில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நாடு தழுவிய பிரசார இயக்கத்தை ராகுல் காந்தி தொடங்குகிறார். இந்தத் தகவலை காங்கிரஸ் கட்சியின் எஸ்.,சி, எஸ்.டி. பிரிவு தலைவர் நிதின் ரவுட் இன்று டெல்லியில் செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

’’பாஜகவின் ஆட்சியில் நாட்டின் அரசியல் சாசனத்தோடு, தலித் மக்களும் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தலித் சமூகத்திற்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இன்று வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதை நாடு தழுவிய அளவில் விவாதத்துக்கு உட்படுத்தி தலித்துகளுக்கு நியாயம் கேட்பதற்காகத்தான் இந்த பிரசார இயக்கம்’’ என்றார் நிதின் ரவுட்.

டெல்லியின் டல்கோட்ரா ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க நிகழ்ச்சியில் கட்சியின் தலித் பிரிவினர் மட்டுமன்றி அனைத்து பிரிவினரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றம் அண்மையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பாக இருந்தபோதிலும் இதை நாடு முழுதும் தலித் அமைப்புகளும் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்த்தனர். நாடு தழுவிய பந்த் தும் நடந்தது. இவ்வளவு எதிர்ப்புக்குப் பின்னரே மத்திய அரசு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது.

நாட்டில் 17 சதவிகித வாக்காளர்களாக இருக்கும் தலித் மக்களுக்காக 84 நாடாளுமன்றத் தொகுதிகள் தனி தொகுதிகளாக இப்போது உள்ளன. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட பாதி தனி தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டிலுள்ள அனைத்து தனித் தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும் என்று ராகுல் திட்டமிட்டிருக்கிறார். இதற்கான விதையாகத்தான் இந்த பிரசாரம் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.

பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் தலித்துகளுக்கும், இட ஒதுக்கீட்டும் எதிராக நடத்தப்படும் அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதல்களை தலித் மக்களுக்கு கொண்டு சென்று காங்கிரசை வலுப்படுத்தவே இந்த, ‘அரசியல் சாசனம் காப்போம்’ பிரசார இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறார் ராகுல்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon