மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

சிறப்பு பார்வை : விலைபோன ஊடகங்கள் விளங்காத மர்மம்!

சிறப்பு பார்வை : விலைபோன ஊடகங்கள் விளங்காத மர்மம்!

ராஜேஷ் ராமச்சந்திரன்

தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பொறுப்பை இதுவரை இந்தியாவில் இந்திரா காந்தி, இந்தெர் குமார் குஜ்ரால் ஆகியோருடன் எல்.கே.அத்வானியும் வகித்திருக்கிறார். போலி செய்திகள் குறித்த புதிய விதிமுறைகளைப் பத்திரிகையாளர்கள் மீது தற்போதைய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் விதித்திருக்கிறார். இந்த விதிமுறைகள் அனைத்தும் நகைச்சுவையாக உள்ளன. கொடுமையான விதிகளாகவே இருந்தாலும் கூட, விதிமுறைகளை உருவாக்க ஆட்சிமுறை குறித்த அடிப்படை புரிதல் இருக்க வேண்டும்.

இத்தகைய விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏன் வெளியிட்டது என்பதே உண்மையில் வியப்பில் ஆழ்த்துகிறது. முதலில், போலி செய்திகளை சில போலி இணையதளங்களும், டிவி சேனல்களும் மட்டுமே பரப்பி வருகின்றன, பழைய முறையான அச்சு ஊடகங்களில் போலி செய்திகள் பரப்பப்படுவதில்லை. நாங்கள் ஒரு முறைக்குப் பலமுறை சரிபார்த்து அதன்பிறகும் ஏற்படும் மிகச்சிறு தவறுகளுக்காக காலம் முழுவதும் புலம்பித் தீர்த்துக் கொண்டிருப்போம். நிச்சயமாகவே சில தவறான ஆட்களும் உள்ளனர். தவறான நிருபர்களாலும், ஆசிரியர்களாலும் ஏற்பட்ட பிழையினால் அனைத்து ஊடகங்களுமே குற்ற உணர்ச்சியைக் கொண்டிருக்கும். ஆனால் பெரும்பாலும் செய்தித் தாள்களும், பத்திரிகைகளும் போலி செய்திகளைப் பரப்புவதில் இருந்து விலகியே நிற்கின்றன. முக்கியமாகத் தனிநபர் தாக்குதலில் பத்திரிகைகளும் செய்தித்தாள்களும் ஈடுபடுவதில்லை. அவதூறு செய்யும் ஆட்களை கிசுகிசு எழுதுவதற்குக் கூட சில பொறுப்பான ஆசிரியர்கள் அனுமதிப்பதில்லை.

ஆனால் சில இணையதளங்களோ கேலிப் பெயர்கள் பயன்படுத்துவதும், லாபத்துக்கும் நிகர லாபத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குழப்புவதும், சொந்த நோக்கங்களுக்காக ஆட்களைச் சேர்ப்பதும் துரத்துவதும், காந்தியை நடனமாட வைப்பதும், நேருவைக் கேளிக்கையாக்குவதும், அவரின் தங்கையை வேறு பெயர்கள் சொல்லி அழைப்பதுமாகப் பல குழப்பங்களை அரங்கேற்றி வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் வலதுசாரி சார்பு ஊடகங்களே வெறுப்பை உமிழும் செய்தி ஆலைகளாக இயங்கி வருகின்றன. இந்த ஊடகங்கள் மதவாதக் கொள்கை உடையதாகவும், வெறுப்புணர்ச்சியைப் பரப்புவையாகவும் இயங்கி வருகின்றன. ஆனால் மாண்புமிகு அமைச்சரோ மைய்ய நீரோட்ட ஊடகங்களில் பணியாற்றி வரும் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களைக் குறி வைக்கிறார். மேலும், இயற்கையான நீதிக்குப் புறம்பாக பத்திரிகையாளர்கள் விசாரணைக்கு முன் 15 நாட்களும் விசாரணைக்குப் பின் ஆறு மாதங்களும் தண்டனைக்குட்படுத்தப்படுவர்.

இத்தகைய பெயர்களை மைய்ய நீரோட்ட ஊடகங்கள் தொடர்ந்து பெற்று வருகின்றன. பணம் படைத்த இணையதளங்களோ மைய்ய நீரோட்ட ஊடகங்களை விலை போனவை என அழைத்து வருகின்றன. அண்மைக் காலம் வரை ஊடகங்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியோ மைய்ய நீரோட்ட ஊடகங்களை விலை போனவை என அழைத்து வருகிறது. ஏராளமான விளம்பரங்களை கையில் வைத்திருக்கும் மாநில அரசுகளோ ஊடகங்களை சமரசவாதிகள் என அழைத்து வருகின்றன. தற்போது மத்திய அரசும் ஊடகங்களை தன் முதல் எதிரி எனக் கூறி அவர்களுக்குத் தண்டனைகளை வழங்குவதாகக் கூறி அச்சுறுத்தி வருகிறது. அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களை விலைக்கு வாங்கியது யார்? ஏழைகளாக இருக்கும் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் அனைவரும் பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிட்டால், அவர்கள் ஏன் இன்னும் குப்பை மேடுகளுக்கு அருகே வசித்து வருகின்றனர்? அப்படி அவர்கள் பணம் பெற்றுக் கொண்டு செய்தி வெளியிட்டு விலையுயர்ந்த வீடுகளை வாங்கி வசித்து வருவதாக வைத்துக் கொண்டாலும் கூட, அத்தகைய டிவி சேனல்களையும், இணையதளங்களையும், வாட்சப் குழுக்களையும் யார் பணம் கொடுத்து விலைக்கு வாங்குவது? இதில் எதுவும் தெளிவுபட விளங்கவில்லையே. ஒன்று, பத்திரிகையாளர்கள் அனைவரும் பணம் சம்பாதிப்பதற்கான பெருவாய்ப்பை இழந்திருக்க வேண்டும், அல்லது மத்திய அரசு எப்பொழுதும் போல தவறாகக் கணித்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும், அமைச்சரின் நடவடிக்கையைப் பார்க்கும்போது, மத்திய அமைச்சரவையில் மற்ற அமைச்சர்கள் மிகவும் தகுதி வாய்ந்தவர்களாகத் தெரிகின்றனர். முக்கியமாக, அமைச்சரின் தலைவர் அவரின் உத்தரவை ரத்து செய்தபிறகு ஜனநாயகவாதியாகத் தெரிகிறார். தேர்தல் வர இன்னும் ஓராண்டு இருக்கும்போது, ஒரு முக்கியமான அரசியல் வாய்ப்பாகத் தான் பார்க்க வேண்டும். என்ன இருந்தாலும், விலை போன இந்திய ஊடகங்கள் என்னும் மர்மம் இன்னும் விளக்கப்படாமலேயே இருக்கிறது.

நன்றி: அவுட்லுக்

தமிழில்: அ.விக்னேஷ்

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon