மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

கத்துவா சிறுமி பெயரை தனது மகளுக்கு வைத்த பத்திரிகையாளர்!

கத்துவா சிறுமி பெயரை தனது மகளுக்கு வைத்த பத்திரிகையாளர்!

ஜம்மு காஷ்மீரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட கத்துவா சிறுமியின் பெயரை கேரளப் பத்திரிகையாளர் ஒருவர் தனது மகளுக்கு வைத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் எட்டு வயது சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். அதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் அந்தச் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், கேரளாவில் உள்ள மாத்ருபூமி பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் ரஜீத் ராம் தனது குழந்தைக்கு கத்துவா சிறுமியின் பெயரை வைத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு 12 மணி நேரத்தில் 14,000 ஷேர், 20,000 லைக்குகள் வந்தன.

இதுகுறித்துப் பத்திரிகையாளர் ரஜீத் ராம் கூறுகையில், 'என் முதல் குழந்தைக்கு வயது ஏழு. அரக்கர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட கத்துவா சிறுமிக்கு வயது எட்டு. அந்தப் பெண்ணையும் நான் என் குழந்தையாகவே பார்க்கிறேன். எனக்குக் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அந்தச் சிறுமிக்கு நான் செய்யும் கடமையாக எண்ணி எனது இரண்டாவது குழந்தைக்கு அவள் பெயரை வைத்துள்ளேன்' எனக் கூறினார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon