மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

கத்துவாவைத் தொடர்ந்து சூரத்!

கத்துவாவைத் தொடர்ந்து சூரத்!

குஜராத் மாநிலம் சூரத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் உடலில் 86 காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6ஆம் தேதியன்று சூரத் பெஸ்டன் பகுதியில் உள்ள கிாிக்கெட் மைதானத்தின் அருகில் 9 வயது சிறுமியின் சடலம் கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்தச் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து 5 மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் அந்தப் பெண் குழந்தை 8 நாள்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப் பட்டதற்கான தடயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகையில், “சிறுமியின் உடலில் பெண் உறுப்பு உள்பட 86 இடங்களில் காயம் இருந்தது. சிறுமிக்குப் போதை மருந்து அளிக்கப்பட்டதா என்பதை அறிய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்..

இந்தச் சம்பவம் குறித்துக் காவல் அதிகாரி பி.கே. ஜலா கூறுகையில், “அந்தச் சிறுமியை வேறு இடத்தில் கொலை செய்துவிட்டு உடலை மைதானத்தில் வீசிச் சென்று விட்டார்கள். சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு 8 நாள்கள் ஆகியும் இதுவரை அந்தச் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளிக்கவில்லை. அடையாளம் காண சிறுமியின் புகைப்படம் எல்லாக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon