மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

சிரியாவின் மீது தொடர் ஏவுகணை தாக்குதல்!

சிரியாவின் மீது தொடர் ஏவுகணை தாக்குதல்!

சிரியாவின் மீது அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளின் படைகள் 110ற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளன..

இன்று அதிகாலை நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப், சிரியாவின் காட்டுமிராண்டித்தனம் மற்றும் கொடூரங்களின் மீது மூன்று நாடுகளின் படைகளும் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறியுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரம் கழித்து தாக்குதல் இலக்கை அழித்து விட்டதாகவும் டிரம்ப் டுவிட் செய்துள்ளார்.

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட விதம் குறித்து அமெரிக்காவின் ராணுவத் தலைமையகம் பென்டகன் கூறியதாவது

முதல் தாக்குதலில் 76 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இவை சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள ரசாயன மற்றும் உயிரியல் குண்டுகள் மற்றும் ஆயுதங்களை தயாரிக்கும் ஆய்வுக்கூடங்கள் மீது ஏவப்பட்டு அவை அழிக்கப்பட்டதாக கூறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்களில் 22 ஏவுகணைகள் செலுத்தப்பட்டு மேற்கு ஹோம்ஸ் நகரின் அருகிலுள்ள ஆயுதங்கிடங்குகள் அழிக்கப்பட்டன. அதே ஹோம்ஸ் நகரிலுள்ள ஆயுத தளவாட கிடங்கும் 7 ஏவுகணைகள் வீசி அழிக்கப்பட்டன என்று கூறியுள்ளது.

இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.ஆனால் இந்த தாக்குதல் குறித்து முன் கூட்டியே அறிந்த ரஷ்யா தனது ஆதரவு நாடான சிரியாவுக்கு தகவல் அளித்து எச்சரிக்கை தகவல் அனுப்பியதால் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சிரியாவின் அரசு தொலைக்காட்சியில் அரசுப்படைகள் 12ற்கும் மேலான ஏவுகணைகளை சுட்டுத்தள்ளி வீழ்த்தி விட்டதாக கூறியுள்ளன.

இதனைத் தொடர்ந்து சிரியா மீது அமெரிக்கா நடத்தியது ஆக்ரமிப்பு தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்து ஐநா பாதுகாப்பு சபையில் ரஷ்யா தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தது. ஆனால் அந்த தீர்மானம் நிராகரிக்கபட்டது. பிரிட்டன் அமெரிக்கா,பிரான்ஸ் நெதர்லேந்து,சுவீடன்,குவைத் ,போலந்து மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்தை நிராகரித்துள்ளனா்.

ஆனால் உலகம் முழுவதும் பல நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளின் ஏவுகணை தாக்குதல்களுக்கு கடுமையான எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அமெரிக்காவிலேயே வெள்ளை மாளிகை முன்பாக ஏவுகணை தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பிரிட்டன் மற்றும் பிரான்சிலும் தங்களது அரசுகள் இது போன்ற தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினா்.

சிலி, ஏதென்ஸ் ,மேற்கு ஆசிய நாடுகள் , ரஷியா உள்ளிட்ட பல நாடுகளில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon