மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

மதுரை ஜல்லிக்கட்டு : ஒருவர் பலி!

மதுரை ஜல்லிக்கட்டு : ஒருவர் பலி!

மதுரை குலமங்களத்தில் இன்று (ஏப்ரல் 15)நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் குலமங்களம் கிராமத்திலுள்ள ரவுத்தபட்டி கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. போட்டியைத் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.இதில் 650 காளைகளுடன் 600 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். காலை 8 மணிக்குத் தொடங்கிய போட்டி மாலை 4 மணி வரை நடைபெற்றது.

வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். பாதுகாப்புக்காக 305 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 5 ஆம்புலன்ஸ்கள், 3 பைக் ஆம்புலன்ஸ்கள் மற்றும் 18 பேர் கொண்ட மருத்துவக் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்குத் தங்கக்காசு, பீரோ, எல்இடி டிவி, மிக்சி, கட்டில், புல்லட் பைக், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியில் பொய்க்காரப்பட்டியை சேர்ந்த பாலு என்பவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

அதேபோல், புதுக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டியில் 1,000க்கும் மேற்பட்ட காளைகளுடன், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கா் தொடங்கி வைத்தார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon