மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

அருண் ஜேட்லி பதவியேற்பு!

அருண் ஜேட்லி பதவியேற்பு!

மத்திய நிதி அமைச்சரான அருண் ஜேட்லி இன்று (ஏப்ரல் 15) மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த சில வாரங்களாக சிறுநீரகக் கோளாறு தொடர்பான சிகிச்சை பெற்று வருவதால் வீட்டில் இருந்தபடியே தன் பணிகளை கவனித்து வரும் அருண் ஜேட்லி... அண்மையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது உடல் நலம் சரியில்லாததால் அவரால் பதவியேற்க வர இயலவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் துணைத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு, ராஜ்ய சபா உறுப்பினரான அருண் ஜேட்லிக்கு தனது அறையில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட அருண் ஜேட்லி தோல்வி அடைந்தார். ஆனால் அவரை மத்திய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள விரும்பிய பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் இருந்து ஜேட்லியை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கினார். அந்த பதவி முடிவடைந்த நிலையில் அண்மையில் உத்திரப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜேட்லி. இன்னும் ஆறு வருடங்கள் அருண் ஜேட்லி மாநிலங்களவை உறுப்பினராக இருப்பார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon