மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

இந்தியா நடத்திய பதக்க வேட்டை!

 இந்தியா நடத்திய பதக்க வேட்டை!

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதி நாளான இன்று இந்திய அணி பதக்க வேட்டை நடத்திவருகிறது. இன்று ஆறு போட்டிகளில் இந்திய அணி ஏழு பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.

மகளிருக்கான பேட்மிண்டன் இறுதிப்போட்டி நடைபெறும் முன்னரே இந்தியாவின் கணக்கில் ஒரு தங்கப் பதக்கமும் ஒரு வெள்ளிப் பதக்கமும் எழுதப்பட்டுவிட்டது. காரணம், இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவாலும் பி.வி.சிந்துவும் களம் கண்டனர். இந்தப் போட்டியில் பி.வி.சிந்துவை 21-18, 23-21 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி சாய்னா நேவால் தங்கப் பதக்கம் வென்றார். தோல்வியடைந்த பி.வி.சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் -ஜோஸ்னா சின்னப்பா ஜோடி, நியூசிலாந்தின் ஜோயல் கிங், அமாண்டா லேண்டர்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் நியூசிலாந்து ஜோடி 11-9, 11-8 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. இதனால் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் சோங் வே லீயை எதிர்கொண்டார். இப்போட்டியில் மலேசிய வீரர் 19-21, 21-14, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் ஸ்ரீகாந்த்துக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ஷரத் அசந்தா, இங்கிலாந்தின் சாமுவேல் வால்கரை எதிர்கொண்டார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷரத் 11-7, 11-9, 9-11, 11-6, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ஷரத் அசந்தா - மவுமா தாஸ் ஜோடி, மற்றொரு இந்திய ஜோடியான சத்தியன் ஞானசேகரன் - மணிகா பத்ரா ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், சத்தியன் - மணிகா ஜோடி 11-6, 11-2, 11-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றது.

பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சத்விக் ரங்கிரெட்டி - சிராக் சந்திரசேகர் ஜோடி, இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ் - கிறிஸ் லேன்கிரிட்ஜ் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இங்கிலாந்து ஜோடி 21-13, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

இதனால் இந்திய அணி 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon