மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

சீனாவுடன் நெருங்கும் இலங்கை!

சீனாவுடன் நெருங்கும் இலங்கை!

இலங்கையை இந்தியா தன் நட்பு நாடு என்று கருதிவரும் நிலையில், ‘இந்தியாவுடனான இலங்கையின் உறவு நெருக்கமானதாகத் தெரியவில்லை. சீனாவுடன் நெருக்கத்தை அதிகரித்துள்ளது’ என்று இலங்கையில் தமிழர்கள் பகுதியான வடமாகாணத்தின் முதல்வர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 14) நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சித்த மருத்துவ நிறுவனத்தின் விழாவில் கலந்துகொள்ளவந்த விக்னேஸ்வரன், பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இல்லை. இதனால் ஆட்சியில் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் ஒன்றையொன்று குறைகூறி வருகிறது.

2020 வரை ஆட்சியைக்கொண்டு செல்ல பிரதமரும் ஜனாதிபதியும் முயன்று வருகின்றனர். தமிழர்களின் உரிமைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களது விளைநிலங்கள் அரசாலேயே சிங்களர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் வீடுகளை, விளைநிலங்களை இழந்து தவிக்கும் நிலை உள்ளது. அவர்களுக்கு அதை பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். வடக்கு கிழக்கு மாகாண மீனவர்களுக்கு மீன்பிடி உரிமையும் பறி போகிறது. தெற்கிலிருந்து சிங்களர்களை அழைத்து வந்து மீன்பிடிக்கச் செய்கின்றனர்.

அனைத்தையும் சரி செய்ய அரசியல் அதிகாரம் இல்லை. 1987இல் கிடைத்த அரசியல் அதிகாரம் போதுமானதாக இல்லை. அடுத்தடுத்து இயற்றப்பட்ட சட்டங்களால் அந்த உரிமையும் பறி போய்விட்டது அரசு அதிகாரிகளே மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ் இல்லை. வடக்கு மாகாண பகுதிகளில் ராணுவம் ஒன்றரை லட்சம் வீரர்களை அப்புறப்படுத்த மறுக்கிறது. விளைநிலங்கள் கட்டடங்கள் அவர்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார் விக்னேஸ்வரன்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon