மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

தடம் புரண்டது ரயில்: 12 பேர் படுகாயம்!

தடம் புரண்டது ரயில்: 12 பேர் படுகாயம்!

மத்தியப் பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம், கட்னி மாவட்டத்திலிருந்து தினமும் இரவு 9.25 மணிக்குக் கட்னி - சோப்பன் பயணிகள் ரயில் புறப்பட்டுச் செல்லும். வழக்கம்போல் நேற்று இரவு (ஏப்ரல் 14) கட்னியில் இருந்து பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்றது.

இந்த நிலையில், இரவு 10.30 மணி அளவில் சால்ஹ்னா - பிப்பரியகாலன் ரயில் நிலையம் வழியே சென்று கொண்டிருந்தபோது, ரயிலில் ஐந்து பெட்டிகள் திடீரெனத் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்துக்கு ஜபல்பூர் மற்றும் இடார்ஸி நிலையங்களில் இருந்து மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டன. விரைந்து வந்த ரயில்வே மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். பயணிகள் ரயில் தடம் புரண்டது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ரயிலில் பயணித்த சுரேந்திர சாஹு என்பவர் பேசுகையில், “ரயில் விபத்துக்குள்ளானபோது நாங்கள் உறங்கிக்கொண்டிருந்தோம். ரயில் மெதுவாகச் சென்றபோது தடம் புரண்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நேற்று காலை உத்தரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் நகரை நோக்கிச் சென்ற மயூரா விரைவு ரயில் பீகார் மாநிலத்தின் லக்கிசாராய் மாவட்டத்தில் உள்ள பன்சிப்பூர் நிலையத்தைக் கடந்த போது, 10 மீட்டர் நீளம் கொண்ட சுமார் 600 கிலோ எடையுள்ள தண்டவாளத்தின் ஒரு துண்டு, ரயில் பெட்டியின் அடிப்பகுதியைக் கிழித்துக்கொண்டு பயணிகள் மீது பாய்ந்தது. இதில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon