மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

மத்திய அரசுக்கு எதிராக சந்திரபாபு உண்ணாவிரதம்!

மத்திய அரசுக்கு எதிராக சந்திரபாபு உண்ணாவிரதம்!

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்காத மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திராவுக்குச் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து மத்திய அமைச்சரவையில் இருந்த தெலுங்கு தேசம் விலகியதோடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகியது.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவும் நாடாளுமன்றத்தில் மனு அளித்திருந்தது. எனினும் அமளி காரணமாக இந்த மனு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் மத்திய அரசு ஆந்திராவை வஞ்சித்துவிட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில், ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், தூளூரு பகுதியில் உள்ள ஷாக்கனூரில் ரூ. 100 கோடி செலவில் அம்பேத்கருக்கு மணி மண்டபம் கட்டப்பட உள்ளது. அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அங்கு நேற்று (ஏப்ரல் 14) நடைபெற்ற விழாவில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு, மணி மண்டபத்துக்கான வரைபடத்தை வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், “ஆந்திரா - தெலங்கானா பிரிந்த காரணத்தினால் தற்போது ஆந்திர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு நமக்கு நீதி வழங்கத் தவறி விட்டது. மத்திய அரசின் போக்கைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறேன்” என்று அறிவித்துள்ளார்.

தனது பிறந்த நாளான ஏப்ரல் 20ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க சந்திரபாபு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உண்ணாவிரதம் இருந்தாலும், அவரது அலுவலக பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் பிரதமர் உண்ணாவிரதம் மேற்கொண்டதாக வெளியான தகவல் தொடர்பாகப் பலரும் விமர்சனம் தெரிவித்திருந்தனர். பிரதமரின் உண்ணாவிரதம் குறித்து பேசும்போது, “நாடாளுமன்றம் முழுதும் முடங்கி போனதற்கு யார் காரணம். இதற்கு மத்திய அரசு பொறுப்பில்லையா? வரலாற்றில் எந்தப் பிரதமரும் உண்ணாவிரதம் இருந்தது இல்லை. உங்களின் இயலாமைக்கு எதிராகவே நீங்கள் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள்” என்று சந்திரபாபு நாயுடு விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon