மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

பாலியல் கொடுமை: தடுக்க என்ன வழி?

பாலியல் கொடுமை: தடுக்க என்ன வழி?

“பாலியல் துன்புறுத்தல் எல்லாம் வெளியாட்கள் மூலம் நடப்பதில்லை. எனவே எல்லா பெற்றோரும் தயவுசெய்து கவனமுடன் இருங்கள்” என்று கூறியுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்

ஜம்மு காஷ்மீரில் எட்டு வயது சிறுமி காவல் துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு நிச்சயம் மரண தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தமன்னா, கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், ஜெயம் ரவி, ப்ரிநிதி சோப்ரா உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து செய்தனர்.

தற்போது இதுகுறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “நாட்டில் நிறைய பிரச்சினைகள் சென்று கொண்டிருக்கிறது. அதில் ஒரு சில பிரச்சினைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதில் ஒன்றுதான் பெண்கள் பாதுகாப்பு. நான் உள்பட நிறைய பெண்களும் சரி, ஆண்களும் சரி... சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பார்கள். ஆமாம், ஐந்து வயதில் நானும் அத்தகைய கொடுமைக்கு ஆளாகியிருக்கிறேன். அப்போது அதை நான் எப்படி அம்மா, அப்பாவிடம் சென்று விவரிப்பேன்? எனக்கு அப்போது என்ன நடந்தது என்று கூட சரியாக எதுவும் தெரியாது. பொதுவாக இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் எல்லாம் வெளியாட்கள் மூலம் நடப்பதில்லை. நமக்குத் தெரிந்த உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகத்தான் நடக்கும். எனவே எல்லா பெற்றோரும் தயவுசெய்து கவனமுடன் இருங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு சில யோசனைகளை முன்வைத்துள்ள அவர், “உங்கள் குழந்தையின் முன் அமர்ந்து பேச ஆரம்பியுங்கள். யார் எப்படிப் பேசினால் தப்பு... எப்படித் தொட்டால் தப்பு... என இரண்டு வயதில் இருந்தே பேச ஆரம்பியுங்கள். குழந்தைகளுக்குப் பள்ளியில் என்ன நடக்கிறது எனத் தெரியாது. டியூஷனில் என்ன நடக்கிறது எனத் தெரியாது. எனவே சிறுவயதில் இருந்தே பாதுகாப்பு குறித்து சொல்லிக்கொடுங்கள். ஒவ்வொரு தெருவில் வசிக்கும் ஆண் நண்பர்களும் ஒரு எட்டு பத்து பேராகக் குழுவாக இணைந்துகொள்ளுங்கள். அதில் தினமும் இரண்டு பேர் உங்கள் தெருவில் என்ன நடக்கிறது எனக் கண்காணியுங்கள். அப்போது சில தவறுகள் நடந்தால் நீங்களே கண்டுபிடிக்கலாம். அதைத் தட்டியும் கேட்கலாம். மொத்தமாக நாம் காவல் துறையை நம்பியே இருக்க முடியாது. தற்போது எனக்கு வெளியே சென்றாலே பயமாக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் சந்தேகத்துடன் பார்க்கத் தோன்றுகிறது. பாலியல் துன்புறுத்தல் மிகத் தவறானது. இதை அழித்தால் நாம் ஓர் அமைதியான இடத்தில் வாழலாம்” என்று தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon