மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

மெட்ரோ டு ஏர்போர்ட்: நகரத் தொடங்கியது நடைபாதை!

மெட்ரோ டு ஏர்போர்ட்: நகரத் தொடங்கியது நடைபாதை!

சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான முனையங்களுடன் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும், வாக்கலேட்டர் எனப்படும் தானியங்கி நகரும் நடைபாதை வசதி நேற்று (ஏப்ரல் 14) முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

உள்நாட்டு விமான நிலையத்தை மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கும் வாக்கலேட்டர் வசதியை விமான நிலைய ஆலோசனை குழுத் தலைவர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக மார்ச் 25ஆம் தேதியன்று விமானப் போக்குவரத்து செயலாளர் ஆர்.என்.சவுபே மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இந்த வாக்கலேட்டர் வசதியைத் தொடங்கி வைத்தனர். இருப்பினும் அப்போது சர்வதேச விமான நிலையத்துக்கான வாக்கலேட்டர் பணிகள் நிறைவடையாததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்தச் சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், சென்னை விமான நிலையத்திலிருந்து மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு விமானப் பயணிகள் தங்கள் லக்கேஜ்களை எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

602 மீட்டர் நீளத்தில் இரண்டு கட்டங்களாக நிறைவு செய்யப்பட்ட இந்தச் சேவையின் மொத்த செலவு 80 கோடி ரூபாய் ஆகும்.

பயணிகளின் வசதிக்காக, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான முனையங்களுக்கு இடையில் இரண்டு பரிசோதனை கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகள் தேவையான தகவல்களை வழங்கும் வகையில் விமானத் தகவல் காட்சி அமைப்புகளும் (FIDS) பொருத்தப்பட்டுள்ளது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon