மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

திமுக ஆட்சிக்கு வந்தால்..: கனிமொழி

திமுக ஆட்சிக்கு வந்தால்..: கனிமொழி

‘திமுக விரைவில் ஆட்சிக்கு வரும். வந்தவுடன் தமிழகம் முழுவதும் பெரியார், அம்பேத்கர் சிலைகள் அமைக்கப்படும்’ என்று கனிமொழி எம்.பி அறிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூரில் இளைஞர் இயக்கத்தின் சார்பில் நேற்று (ஏப்ரல் 14) அம்பேத்கரின் 128ஆவது பிறந்தநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் கனிமொழி எம்.பி.

விழாவில் பேசிய கனிமொழி, “இத்தனை ஆண்டுகாலமாக இல்லாமல் தந்தை பெரியாரின் பிறந்த நாளை திராவிட இயக்கங்கள் மட்டுமல்லாமல், தமிழக மக்கள் பலரும் கொண்டாடியதைப் பார்த்தோம். அதுபோல இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை ஒவ்வொரு தெருமுனைகளிலும், சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இதற்குக் காரணம் இன்று இந்தியாவைத் தமிழகத்தைச் சூழ்ந்திருக்கக் கூடிய சூழல் என்னவென்று நமக்குத் தெரியும். சில நாள்களுக்கு முன்னால்தான் பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்துக்கு வந்தார்கள். ஒரு பிரதம மந்திரி, பதவி ஏற்றதில் இருந்து இந்தியாவிலேயே கால் வைக்காமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டிருக்கக் கூடிய, பல நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பேசக் கூடிய ஒரு பிரதமர், தன் ஆண்மைக்கு 56 இன்ச் மார்பை தட்டித் தட்டி பேசக் கூடிய ஒரு வீரியமிக்க, தைரியம் மிக்க தலைவர் தமிழ்நாட்டுக்கு வருகிறார்... தமிழ்நாட்டின் தெருக்களில் கூட கால் வைக்க முடியவில்லை.

ஐஐடியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, அங்கிருந்து குறுக்குச் சுவரை உடைத்து பாதை அமைத்து பக்கத்தில் இருக்கும் கேன்சர் இன்ஸ்டிடியூட் போய் நிகழ்ச்சி நடத்திவிட்டுத் திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து ராணுவக் கண்காட்சிக்கும் வானிலேயே பயணம். இப்படி தமிழ்நாட்டின் உட்பகுதியைகூட தொடாமல் வான் வழியாகவே வந்து போய்விட்டார். அப்படியும் ஐஐடி மாணவர்கள் விடவில்லை. எதிர்ப்புப் பதாகைகள் காட்டினார்கள். நீங்கள் வானத்தில் பறந்தாலும் எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம் என்று நமது சகோதரர்கள் கறுப்பு பலூன்களை பறக்க விட்டார்கள். எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்றால் எப்படி வேண்டுமானாலும் தெரிவிப்போம். தமிழர்களுக்கு என்று தனி குணம் உண்டு. வரவேற்பது என்று முடிவெடுத்துவிட்டால் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம். அதேநேரம் தமிழகத்துக்குத் துரோகம் செய்தால் எப்படி பாடம் கற்றுக் கொடுப்போம் என்பதைப் பிரதமருக்கு தெளிவாகக் காட்டிவிட்டோம்.

இப்போதாவது மத்திய அரசு தெளிவாக உனர்ந்துகொள்ள வேண்டும். இது வெறும் காவிரி விவகாரம் அல்ல. கடந்த ஆண்டு மெரினாவில் போராட்டம் நடந்தது. அதை ஜல்லிக்கட்டு போராட்டம் என்று மட்டும் பார்த்துவிடக் கூடாது. தமிழகத்துக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை எதிர்த்து இளைஞர்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள்.

காவிரிப் பகுதியில் பிறக்காதவர்கள்கூட சென்னை போன்ற இடங்களில் கூட இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்றால் அது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கான எதிர்ப்பு மட்டுமல்ல, தொடர்ந்து நீட் பிரச்சினையால் அனிதாவை இழந்த கோபம், இந்தித் திணிப்பை எதிர்த்து எழுந்த கோபம், நாம் கட்டிய மருத்துவக் கல்லூரிகளில் நம் வீட்டுப் பிள்ளைகளில் இடம் இல்லை என்ற கோபம் என தமிழனின் இத்தனை கோபங்களும் சேர்ந்து கொதித்து எழுந்த நிலைதான் பிரதமருக்கு எதிரான இந்த கறுப்புக் கொடிப் போராட்டம். இதை மத்தியில் இருப்பவர்கள் உணர வேண்டும்” என்று குறிப்பிட்ட கனிமொழி,

“இங்கே அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்குப் போராட வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். கவலைப்படாதீர்கள் திமுக ஆட்சி வரும். அப்போது யார் யாருக்கெல்லாம் மரியாதை, கௌரவம் மறுக்கப்பட்டதோ அவர்களுக்குக் கௌரவமும், மரியாதையும் தரும் வண்ணம் தமிழ்நாடு முழுதும் இப்படிப்பட்ட சிலைகளை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாக்கும்” என்று அறிவிக்க விழா முழுவதும் கரவொலி.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon